"அப்பா தேவை!"2

                                                       "அப்பா தேவை!"

                                            (தொடர்ச்சி)


                                                                     
லேனா தொடக்கி வைத்த காரியம் வலு கதியிலே சூடு பிடித்து விட்டது. நாங்கள் கடையை விட்டு வெளிக்கிட்டு லேனாவின் வீடு வந்து சேர்ந்து  ஒரு அரை மணி நேரம் கூடி ஆகியிருக்காது. தொலைபேசி கிணுகிணுத்தது. நான் இன்றைக்கும் நினைக்கிறது என்னவென்றால்; அது நேரம்வரை நாங்கள் செய்த காரியத்தின் பாரதூரங்கள் பற்றி லேனா கொஞ்சம் கூடச் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டாள் என்று. தொலைபேசி கனநேரம் சிணுங்கியது.
   "தொலைபேசியை எடுக்க மாட்டியோ?" ஆற்ற மாட்டாமல் நான் மெல்லக் கிசுகிசுத்தேன். விருப்பமில்லாமல் மெதுவாய் எழுந்து போய் தொலைபேசியைத் தூக்கினாள்.
  "ஹ ....ஹலோ " ஒரு மெல்லிய நூலைப் போலே லேனாவின் குரல் மெலிந்து ஒலித்தது. நான் கிட்டே போய் காதை வைத்து ஒட்டுக் கேட்டேன்.  
"ஹலோ இஞ்சை இது நான் வேறா யொகான்சன்    கதைக்கிறன். நீர் தானே பிள்ளை கடையிலை விளம்பரம் போட்டது?"
லேனா கண்கள் பெரிதாய் விரியப் பார்த்தாள். பின் ஒரு செருமலுடன் 
"ஓ......"
"நல்லதாப் போச்சு. உமக்குப்   பிடிச்ச சங்கதி ஒண்டு என்னட்டை  இருக்கு.அவன் கொஞ்சம் அமைதி இல்லாமல் தான் இருக்கிறான். ஆனால் பாரும் போன ரெண்டு கிழமையாய் ஒருக்காலும் அவன் வீட்டுக்கை சலம் பெய்யேல்லை. வெளியிலை ஓடியோடிப் போய் அடிச்சிட்டு வருவான்"  

நாடி கழன்று தன் வயிற்றில் வந்து விழுமாப்  போல லேனா வாயைப்  பிளந்தாள்.
“வெளியே போய் சலம் அடிக்கிறவரோ ?”திடுக்காட்டத்துடன் லேனா கேட்டாள்.
 “ ஓம் பிள்ளை. ஆள் வலு கெட்டிக்காறன்”
பெருமையுடன் வேறா யொகான்சனின் குரல் ஒலித்தது. அந்த மனுசிக்கு உண்மையிலேயே மேல் வீடு கழன்று போய்விட்டது என்று நான் நினைத்தேன். பின்னே என்ன?ஒரு அப்பா வீட்டிற்குள் மலகூடம் போய் சலம் பெய்யவில்லையாம்;ஆனால் வெளியிலே போய்ச் சலம் அடிக்கிறாராம். அதைப் போய்ப் பெருமையுடன் பிறத்தியாருக்குச் சொல்கின்றதே இந்த மனுசி? லேனாவுக்கு அஞ்சும்  கெட்டு அறிவும் கெட்டுப் போனது; முகம் என்றால் எட்டுக் கோணலாகிப்   போயிருந்தது.ஒரு மாதிரி தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள். பின் கொஞ்சம் எரிச்சல் கலந்த குரலில்;
    "அவிச்ச வெண்டிக்காய் சாப்பிடுவரே?" என்று கேட்டாள். மறுமுனையில் ஒருகணம் அமைதி நிலவியது.
     " இல்லை. நான் ஒருக்காலும் அதைக் குடுத்துப் பார்க்கேல்லை.அது சரி
       மோனை கொம்மா வீட்டை நிக்கிறாவே? வீட்டிலை இருக்கிற
       பெரியாக்களோடையும் நான் கதைக்க வேணும்." 
லேனா தொப்பென்று திண்டுநாற்காலியில்  விழுந்தாள். கடைசியில் வேறா யொகான்சன் சொன்னது என்னவென்றால்; அஞ்சு மணியளவில் அவரைக் கூட்டி வருவாவாம், அப்போது நேரே பார்த்தால் மனதுக்குப் பிடித்துவிடுமாம்.

தொலைபேசியை வைத்த பின் லேனா முகட்டை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். 
  "உங்கடை அப்பா வெளியிலை சலம் அடிக்கிறவரே? திறில்லை!"
என்னைக் கேட்டாள்.
  "இருந்திட்டு எப்பெண்டாலும் ஒரு ஆத்திரம்  அவசரத்துக்கு  அடிக்கிறதுதான்."
லேனா குப்புற தரையில் படுத்தபடி தலையைத் தரையில் அடித்தாள்.
  "அய்யோ! எக்கணம் அம்மா வந்து நல்ல கிழிதான் கிழிக்கப் போறா."

லேனா எதிர்பார்த்தது வலு சுறுக்காக நடந்தது. கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு படாரென அகலத் திறந்தது. அது திரும்பச் சாத்தப்பட்ட வேகத்தில் வீடு முழுவதுமே கிடுகிடுத்தது.கையில் சுருட்டிய அந்த விளம்பரத் துண்டுடன் 

லேனாவுக்கு அம்மா சிவந்த முகத்துடன் வந்து நின்றா.
   "லேனா லீஈட் !!! என்ன கூத்திது?" லீட் என்ற குடும்பப் பெயரையும் சேர்த்துச் சொல்லி அதட்டிக் கூப்பிட்டா.
லேனா ஒரு அசுமாற்றமும் காட்டாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
   "வாயைத் துறந்து மறுமொழி சொல்லு. உனக்கென்ன மூளை கீளை
    குழம்பிப் போச்சே?"
லேனாவால் ஒன்றுமே சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும். அவளுக்கு ஆதரவாக,
   "அது என்னெண்டால்....... லேனா வந்து....... ஒரு சில காரியங்கள் கெதிப் பண்ணி நடக்க வேணுமெண்டு விரும்பிறாள்." என்று இராகம் இழுத்தேன்.


 நல்லகாலமாக அவ,லேனாவுக்கு அம்மாவாக இருக்கப் பழகிவிட்டா. ஆனபடியால் லேனாவினது இப்படியான நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியை அவவுக்குத் தந்ததில்லை. இவவை கலியாணம் கட்ட பலபேர் விரும்பக்கூடும் என நான் அவவைப் பார்த்து நினைத்துக் கொண்டேன்.
   "என்ரை அம்மாவாணை இனி இப்பிடிச் செய்ய மாட்டன்." நிலத்தில் கிடந்த லேனா சத்தியம் செய்தாள். லேனாவுக்கு அம்மாவும் கீழே நிலத்தில் இருந்தா.இந்த வீட்டில் இவர்கள் இப்படித்தான் கீழே இருப்பார்கள்.
    "சரி! சரி! நல்லவேளை . ஆராவது வடிவா வாசிச்சு விளங்க முன்னம்
     நான் பிடுங்கீட்டன்."லேனாவுக்கு அம்மா பக்குப் பக்கென்று சிரித்தா.
இப்போது எனக்குத் திரும்பவும் நிலைமையை விளக்கி உதவி செய்ய வேண்டிய பொறுப்பு  இருப்பதை நான் விளங்கிக் கொண்டேன்.
   "ஒருத்தரை கூட்டிக்கொண்டு  அஞ்சு  மணியளவிலை வேறா யொகான்சன்
    எண்ட ஒரு பொம்பிளை வருவா."




அன்று பின்னேரம் அஞ்சு மணி ஆகின்றதற்கு முன்னம் லேனாவுக்கு அம்மா ஒரு பதினேழு,பதினெட்டுத் தரம் வேறா யொகான்சனைத் தேடி தொலைபேசியை எடுத்திருப்பா.மணி அடித்தசீர் தான்.அங்கால் பக்கம் ஆருமே எடுத்தபாடாயில்லை.நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

மணிக்கூட்டில் நேரம் நாலேமுக்காலைக் காட்டியபோது, சாப்பாட்டு மேசையைச் சுற்றி இருந்து  மூவரும் காத்துக் கொண்டிருந்தோம். மணிக்கூட்டில் நுணுத்தக் கம்பி குதித்துக் குதித்து பன்னிரண்டை நெருங்கியது.
   "உங்கடை கதையை நான் நம்பேல்லை..." என்று அவ சொல்லி வாய் மூடவில்லை...வாசல் அழைப்புமணி கிணுகிணுத்தது.


வாசற்படியிலே சிரித்த முகத்துடன் சிவப்பு நிற மேற்சட்டையுடன் தலையைச் சாய்த்தபடி  ஒரு வேறா யொகான்சன் நின்றிருந்தா. அவவைத் தாண்டி அவவின் பின்னாலே எட்டிஎட்டிப் பார்த்தோம்.எந்த ஒரு அப்பாவும் எங்களுடைய  கண்ணிலே தட்டுப் படவில்லை. ஒருவேளை அங்காலே முடக்கிலே சலம் அடித்துக் கொண்டு நிற்கிறாரோ?



   "வணக்கம்" சொன்னா லேனாவுக்கு  அம்மா.
   "வணக்கம். வணக்கம். நானிப்ப ஆரோடை வந்திருக்கிறன் எண்டு பார்க்க
    ஆவலாய் இருப்பீங்கள்." பெரிய புளகத்துடன் கிட்டத்தட்ட கூவினா வேறா

யொகான்சன்.லேனாவுக்கு அம்மா புன்சிரிப்பை தன் முகத்தில்  காட்ட தெண்டித்தா. அது சரிவரவில்லை.
   "நாங்கள் உண்மையாக  இன்னும் ஒரு முடிவெடுக்கேல்லை" லேனா அனுங்கினாள். அது வேறா யொகான்சனின் காதில் ஏறினால்தானே? ஆள் கடகடவென்று தன் மகிழுந்தின் கிட்டப் போகப் போனது. இப்படியான பொம்பிளைகளை  எந்தச் சாமிதெய்வம் வந்தாலும் தடுத்து நிறுத்த ஏலாது.


லேனாவையும் கூட இப்போது தடுத்து நிறுத்தேலாமல் போய்விட்டது. தடதடவென்று படிகளில் பாய்ந்து ஓடின லேனா, வேறா யொகான்சனைத் தாண்டிப் போய்ச் சத்தமாகச் சொன்னாள்:

 "சொல்லுறதைக் கேளுங்கோ! எங்களுக்கு அவர் வேண்டாம். வெளியாலை
   சலம் அடிக்கிறவர் எண்டால் எங்களுக்குச் சரிப்பட்டு வராது........."

லேனா சொல்லி முடிக்கவும், மென்மையான ஒரு சத்தம்;
 "வௌவ்" என்று கேட்டது.எட! ஒரு நாய்க்குட்டி! மகிழுந்தின் சாளரக் கண்ணாடியூடாக ஒரு நாய்க்குட்டி கண்ணில் பட்டது.
  "ஒரு நாய்க்குட்டியோ!" லேனா கிசுகிசுத்தாள். 
  " ஓம் பிள்ளை.ஒரு நாய்க்குட்டிக்குத்  தானே ஆசைப்பட்டநீங்கள் ?" நெற்றியைச் சுருக்கியபடி கேட்டா. லேனா ஏதோ சொல்ல உன்னியுன்னி  வாயை மூடிமூடித் திறந்தாள்.  
 "இல்லை நான்...வந்து...,நான்...வந்து..."

 "ஒரு சின்சில்லா வோ ?!"கதவடியில் நின்ற லேனாவுக்கு அம்மா கத்தினா.



                                                
Chinchilla 
அது ஒன்றும் ஒரு சின்சில்லா இல்லை . அது ஒரு நாய்க்குட்டிதான். அந்த நாய்க்குட்டி என்றால் ஒரு சின்சில்லாவை விட வடிவானதாக இருந்தது. லேனாவுக்கு அதை வைத்து வளர்க்க விருப்பம்.

                                         

ஆனால் "எல்லாத்துக்கும் ஒரு எல்லையிருக்கு"என்று தாய் முடிவாகச் சொல்லிவிட்டா. வேறா யொகான்சன் நாய்க்குட்டியுடன் திரும்பிப் போகவேண்டி வந்தது.

வந்த கொதி குழப்பம் எல்லாம் அடங்க வேண்டி லேனாவுக்கு அம்மா தனது உந்துருளியைக் கழற்றிப் பூட்ட வெளிக்கிட்டா. நானும் லேனாவும் சலவைஎந்திரத்தில் ஏறி அமர்ந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம். இடைக்கிடை ஏதாவது ஒரு சாவியை எடுத்துத் தரும்படி எங்களைக் கேட்டா. மற்றும்படிக்கு நாங்கள் கம்மென்று கிடந்தோம்.


 "இப்பிடிக் கண்டபடிக்கு கண்ட இடமெல்லாம் கண்டதையும் எழுதித் தொங்க விடேலாது லேனா" என்று அமைதியைக் கலைத்ததா தாய்.
 "இது எங்கை போய் முடிஞ்சிருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தநீயே
  லேனா?"
அவ வேலை செய்கிற கடைக்கு வருகின்ற கலியாணம் ஆகாத ஆம்பிளைகளை, மணமுறிவான, தன்தன் மனிசிமாரை விட்டுவிலகி  பிரிந்து இருக்கின்ற மனிசன்மாரைப் பற்றி  எல்லாம் நினைத்துப் பார்த்தேன்.
  "அதோடை ஒரு சங்கதி இஞ்சை எங்கடை வீட்டிலை என்னெண்டால்,
  இஞ்சை ஒரு அப்பாக்களுக்கும் இடமில்லை கண்டியோ!" உந்துருளியுடன் அவ இன்னும் பிடிபாடோடிருந்தா. லேனா அந்த விடயத்தில் தாயுடன் ஒத்துப் போகவில்லை.ஏன் கீழே நிலவறையை ஒதுக்கினால் ஓராள் அதிலே குடியிருக்கலாந்தானே?
  "எங்கடை வீட்டிலை ஏற்கெனவே இருக்கிற ஆம்பிளை போதும் லேனா!
   ஆம்பிள்ளைக்கு ஆம்பிள்ளையாய் எங்கடை வீட்டை திறில்லை அடிக்கடி
   வந்து புழங்கிறவர்  தானே?" தான் இதுவரை கேள்விப் பட்டவரை அந்தக் கதை ஒரு விசர்க்கதை என்று லேனா நினைத்தாள்.
  "திறில்லை...., இவர்...., இந்த வீட்டிலை......,ஒரு ஆம்பிளை!"  சேட்டை குரலில் தொனிக்க லேனா கேட்டாள்.
 "ஆ .என்ன பிசத்திறாய்? அப்ப என்னை ஆரெண்டு நினைக்கிறாய்?" எரிச்சலில் வெடித்தேன்.
" அய்யோ நீ பிழையா நினையாதை. நீ திறில்லை வந்து பக்கத்து வீட்டுப்
   பொடியன் எல்லோ?"

ஆகா! உற்ற நண்பன்,நல்ல கூட்டாளி! என்று சொல்லுவாள் என்று நினைத்தேனே!
         
                                                     (இப்போதைக்கு முடிந்தது )

சொற்பொருள் விளக்கம்:
வெளிக்கிட்டு- புறப்பட்டு
ஆற்ற மாட்டாமல்- சகிக்க முடியாமல் 
இஞ்சை-இங்கே 
சலம்-மூத்திரம்
மேல் வீடு கழன்று போய் விட்டது- மூளை குழம்பி விட்டது 
அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு-செய்வதறியா நிலைமை 
மோனை- பெண்பிள்ளைகளை அழைக்கும் மரியாதைச் சொல்
கொம்மா>உங்கம்மா >உங்களம்மா
நிக்கிறாவே>நிற்கின்றாவே
திண்டுநாற்காலி - sofa
எக்கணம்- எந்தக் கணமும் -எந்த நேரத்திலும்
கிழி கிழித்தல்- வாய்க்கு வந்தபடி ஏசுதல் 
அசுமாற்றம்- அசைவு
கெதிப் பண்ணி>கதி பண்ணி-விரைவு பண்ணி
என்ரை - என்னுடைய
அம்மாவாணை-அம்மா+ஆணை
பிடுங்கீட்டன்=பிடுங்கி +இட்டன்
அடித்தசீர் தான்-அடித்த படிதான்
அங்கால் பக்கம்-அடுத்த பக்கம்
நுணுத்தம்-நிமிடம்
முடக்கு-மூலை
புளகம்(புளுகம்)-மகிழ்ச்சி
தெண்டித்தல்-முயற்சித்தல்
அனுங்கினாள்-முனகினாள் 
அவையள்-அவர்கள்
உன்னியுன்னி-நினைத்துநினைத்து
கண்டியோ?> கண்டாயோ?-அறிவாயோ?
பிடிபாடு-சண்டை
பொடியன் எல்லோ?=பையன் அல்லவோ?

Kommentarer