Jørgen hattemaker
Alf Prøysen(23.07.14-23.11.70)
தொப்பி தைக்கும் யோர்கன்
நொஷ்க் மூலம்:அல்வ் புறொய்சன்
தமிழாக்கம்: ந.குணபாலன்
அல்வ் புறொய்சன் என்ற கவிஞர் இயற்றிப்பாடிய கவிதை இது. அவரது பிள்ளைப்பிராயத்தில் பொருளாதார ஏற்ற இறக்கம் நோர்வேயின் குமுகாயத்தில் மடுவுக்கும் மலைக்குமான இடைவெளியாக இருந்தது. குடியிருக்க நிலமற்ற ஏழைகள் பெரிய நிலச்சொந்தக்காரர்களின் தயவை நாடி தமக்குக்கிடைத்த காணித்துண்டில் ஒரு குடிலை அமைத்து வாழ்ந்தார்கள். அவர்களுக்குப் பயிர்செய்யவும் ஒரு துண்டு நிலம் கிடைத்தது. சிலநேரம் ஒரு பன்றி, ஒரு பசு, சில கோழி என்பவைகளையும் வளர்த்தார்கள். குடிக்கூலியாக அவர்கள் காணிச் சொந்தக்காரனின் வயல், தோட்டம், காடு, வீடு என்ற இடங்களில் வேலை செய்யவேண்டும்.
நோர்வே வடதுருவத்தின் அருகே இருப்பதால் சூரியன் உச்சந்தலைக்குமேலே வராது.கிழக்கே எழுந்து தெற்காகப் பயணித்து மேற்கே படும். வடக்கு சூரியவெளிச்சத்தால் வருடப்படும். மலையும், பள்ளத்தாக்குமான நோர்வேயின் நில அமைப்பில் வடக்குப்பார்த்த தெற்கு மலைச்சரிவில் வெய்யில் வடந்தைக் காலத்தில் படவே படாது. இந்த விளக்கங்களுடன் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.
சொல்லப் பெரியது ஏதுமிலை சுகஞ் சொந்தமிலா மிடியான்.
வல்லான் சொலமனுக்கு வண்ணத் தொப்பி தைக்கும் அடியான்.
நல்லபேர் யோர்கன் என்ன நாளும்பொழுதும் நலிந்த குடியான்.-ஆனாலும்,
செல்லன் சொலமனும், செலுவன் நானும் அம்மணமாய்த்தானே செனித்தோம்?!
(மிடியான்-வறியவன் , செல்லன்-சுகவாசி, செலுவன்-மெலிந்தவன், செனித்தோம்-பிறந்தோம்)
கதிரவன் ஒளியோ உன்மேல் கனிவாய்ப் படுமே!
சதிராடும் நிணல்தான் என்சதிரம் சலித்திடப் படுதே! -ஆனாலும்,
மிதிக்கும் புல்லு பச்சைதானே இருவருக்கும் மேதினியில்?!
(கனிவாய்-இதமாய், நிணல்,இணல்-நிழல், சதிரம்மே-சரீரம், மேதினி-பூமி)
மண்மீதில் புல்நடுவே லில்லிமலர் மலர்ந்திருக்கும் மாலை;
விண்மீதில் விரை பறவையெலாம் விளையாடும் வேளை;
கண்மூடித் தொப்பிக் குடிலில் நானும் கானம் அனுங்கும் காலை! -ஆனாலும்,
ஆண்டே! சொலமன் அரசே! அறிவாயோ? எத்தகையது நாளை?
(கானம் அனுங்கும் காலை-பாடல் ஹம்மிங் செய்யும்போது, ஆண்டே-முதலாளியே,தலைவா)
கதிரவன் ஒளியோ உன்மேல் கனிவாய்ப் படுமே!
சதிராடும் நிணல்தான் என்சதிரம் சலிக்கப் படுதே! -ஆனாலும்,
மிதிக்கும் புல்லு பச்சைதானே இருவருக்கும் மேதினியில்?!
சொலமன் அரசே! உனக்கு சோறும் பானமும் சொரிந்து மீதம் சேறாகும்!
பலமோ பல்லெனப் பார்க்கும் பாண்கட்டை எனக்கும் கிட்டும் பேறாகும்!
இலம்பாடுடை எளியேற் கிரையானதும் மறைவில் மலமாய் ஈறாகும்!-ஆனாலும்,
புலத்தே புல்லாகி வெள்ளாட்டின் தீனாகி உனக்கும் புலவுச்சோறாகும்!
(இலம்பாடு-வறுமை, பாண்கட்டை- காய்ந்தபாண், பேறு-அடையத்தக்கது, இரை,
ஈறாகும்-முடிவாகும், புலம்-வயல்)
கதிரவன் ஒளியோ உன்மேல் கனிவாய்ப் படுமே!
சதிராடும் நிணல்தான் என்சதிரம் சலிக்கப் படுதே!-ஆனாலும்,
மிதிக்கும் புல்லு பச்சைதானே என்றும் மேதினியில்?!
செல்வமிகு சொலமனை நாடிச் சாபாவின் அரசி சேவிக்க வருவாள்!
செல்லாக்காசு என்னையும் தேடி ஏழை லேயா சேர்ந்திட வருவாள்!
பட்டுவிரித்த கட்டில் அங்கே! பசும் புற்றரைதான் இங்கே!-ஆனாலும்,
கட்டவிழ்வதும் கந்தர்வ சுகமே! காதில் கேட்பதும் கின்னர கீதமே!
கதிரவன் ஒளியோ உன்மேல் கனிவாய்ப் படுமே!
சதிராடும் நிணல்தான் என்சதிரம் சலித்திடப் படுதே! -ஆனாலும்,
மிதிக்கும் புல்லு பச்சைதானே இருவருக்கும் மேதினியில்?!
கூம்பிய வெயில் அரண்மனைக் கோபுரக் கூம்பின் பின் சரியும்!
சாம்பிய சாமம் சல்லாபஞ் சுமக்குங் கனவும் வந்து சொரியும்!
நம்பிராசன் சொலமன் நல்லவிதமாய் நானுமாக; பின்னே திரியும்
தம்பிரானுக்கும் என்தலைதடவித் தொப்பி தைக்கவுந் தெரியும்!
(கூம்பிய-குறைகின்ற, சாம்பிய-ஒளிகுறைந்த)
கதிரவன் ஒளியோ என்மேல் கனிவாய்ப் படுதே!
சதிராடும் நிணல்தான் உன்சதிரம் சலிக்கப் படுமே!-ஆனாலும்,
மிதிக்கும் புல்லு பச்சைதானே என்றும் மேதினியில்?!
Kommentarer
Legg inn en kommentar