சிங்கநெஞ்சன்3

 


                                                          மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                        

                                                   எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                     (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                             (14/11-1907 --- 22/01-2002)
                                                       ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                         ( Ilon Wikeland)
                                                             தமிழாக்கம் :  ந. குணபாலன்


துடிப்பு 3 : குதிரைக்காறன் வளவு வீடு ! 

நினைச்சது நடந்திட்டிது. இப்பிடி ஒரு அதிசயத்தை முன்னை நான் அனுபவிச்சதேயில்லை. நேரடியாகச் சொல்லுறது எண்டால், நான் வந்து அந்தப் பச்சை நிறப் பேர்ப் பலகை தறைஞ்சு இருந்த படலைக்கு முன்னாலை நிண்டன். பேர்ப்பலகையை வாசிச்சன்.

"சிங்கநெஞ்சன் சகோதரர்கள்"

என்னமாதிரி நான் அங்கை வந்தநான் ? எப்ப பறந்தநான்? எப்பிடி ஒருத்தரையும் விசாரிக்காமல் பாதை பிடிச்சு வந்தநான் ? அனக்கு  ஒண்டும் தெரியேல்லை. அனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்டே  ஒண்டுதான். நான் "சிங்கநெஞ்சன் சகோதரர்கள் "எண்ட பேர்ப்பலகை இருக்கிற படலைக்கு முன்னாலை நிண்டதுதான்.


நான் அண்ணரைப் பெலத்துக் கூப்பிட்டன். கனக்கத் தரம் கத்திக் கத்திக் கூப்பிட்டன். ஒரு மறுமொழியுமில்லை. பேந்துதான் ஞாபகம் வந்திச்சுது, சொன்னாப்போலை அண்ணர் அங்கினை பணிய ஆத்தங்கரையிலை மீன் பிடிச்சுக் கொண்டிருப்பாரெல்லே?

நான் ஆத்தங்கரைக்குப் போற ஒற்றையடிப் பாதையிலை கடகடெண்டு  ஓடினன். பங்கை பார்த்தால் என்ரை அன்பு அண்ணர்! என்ரை ஆசை அண்ணர்! பாலத்து ஒட்டுக் குந்திலை இருக்கிறார். பொன்னிறத் தலைமயிர் வெய்யிலிலை விளக்கு வெளிச்சம் போலை பள பளக்கிது. நான் என்னதான் தலையாலை நிண்டு தெண்டிச்சாலும் ,  அண்ணரைக்  கண்டவுடனை என்ரை மனம் கொண்ட புளுகத்தைச் சரிவர உங்களுக்கு என்னாலை இப்ப விளங்கப் படுத்தேலாமல் கிடக்கு.

நான் வந்ததை அண்ணர்  கவனிக்கேல்லை.
 "அண்ணே ஏ  ஏ  ஏ  ர்"
நான் கத்திப் பார்த்தன். நான் நினைக்கிறன், நான் அழுதிருக்க வேணும் எண்டு. ஏனெண்டால்  ஒரு அனுங்கல் சத்தம் மட்டும் தான் வந்திது. அது அண்ணருக்கு எக்கணம்  கேட்டுப் போச்சு. அண்ணர் என்னை பார்த்தவர். ஆனா அவராலை என்னை ஆரெண்டு முதலிலை மட்டுக் கட்டேலாமல் போச்சாம். ஆரெண்டு அறிஞ்சவுடனை கையிலை கிடந்த தூண்டிலை தூக்கி எறிஞ்சு  போட்டு
 "என்ரை சீனியப்பு!"
எண்டு கூவிக் கொண்டு ஓடி வந்தார்.மெய்மெய்யா இது நான்தானோ அவரிட்டை வந்திருக்கிறன் எண்டு அறிய விரும்பினது போலை  மூச்சடைக்க  இறுக்கிக் கட்டிப் பிடிச்சார். நான் கொஞ்சம் அழுதன். அம்மளவு நாளும் அவரைப் பிரிஞ்சு  நான் தவிச்ச தவிப்பு என்னை அழ வைச்சது.

அண்ணர் எண்டால் பக்குப் பக்கெண்டு சிரிச்சார்.
"என்ரை சீனியப்பு! சீனியப்பு சிங்கநெஞ்சன் ! ஒருமாதிரி என்னைத் தேடி என்ரை குஞ்சன் வந்திட்டான் "


060920121191.jpg


"சீனியப்பு சிங்கநெஞ்சன் ! சீனியப்பு சிங்கநெஞ்சன்!"
சொல்லிச் சொல்லி சிரிச்சம். கேக்க கேக்க கிளுகிளுத்த சிரிப்புத்தான் வந்திச்சு.  கன காலத்துக்குப் பிறகு ஏதோ  ஒரு பெரிய பகிடியைக் கேட்டது போலச் சிரிச்சம். எங்களுக்கு எதையாவது நினைச்சுச் சிரிக்க வேணும் போலை கிடந்திச்சு, சிரிச்சம். அளவுக்கு மீறின புளுகம் நெஞ்சுக்குள்ளை கிளம்பிச்சுது,சிரிச்சம். சிரிப்பை அடக்கேலாமல் ஒருத்தரை ஒருத்தர் நிலத்திலை விழுத்தப் பார்த்தம். சிரிப்பு மட்டும் குறையவேயில்லை. இன்னும் இன்னும் கூடிக் கொண்டு போனது. கீழை புல்லு நிலத்திலை விழுந்து உறுண்டம் , சிரிப்புக் குறையேல்லை. ஆத்துக்குள்ளை  உறுண்டு விழுந்தம், சிரிப்புக் குறையேல்லை. எக்கணம் தண்ணிக்குள்ளை தாழப் போறம் எண்டு நினைச்சன் .

ஆனால் நாங்கள் தண்ணிக்குள்ளை தாண்டு போகேல்லை. நீந்தத் துவங்கினம்! எனக்கெண்டால் அதுவரை நீந்தவே தெரியாது. எத்தினை தரம் ஆசைப் பட்டிருப்பன்; நீந்தப் பழக வேணும், நீந்தப் பழக வேணும் எண்டு! இப்ப பார்த்தா, அந்த மாதிரி நீந்த வந்திட்டிது.

"அண்ணர் ! என்னை ஒருக்கால் பாரும்! நானும்  நீந்திறன் எல்லே?"நான் கத்தினன்.
"அதப்பிடித்தான்! இனி என்ரை சீனியப்புவுக்கும் நல்லா நீந்த வருமெல்லே?"
அண்ணர் புளுகத்தோடை சிரிச்சார். அப்பத்தான் ஒரு சங்கதியைக் கவனிச்சன்.
"அண்ணர்! ஒரு விசயத்தைக் கவனிச்சியளே? அனக்கு  இப்ப இருமல் வாறது துப்புரவுக்கு நிண்டிட்டிது எல்லே?"
" மெய்தான்! இனி என்ரை சீனியப்புவுக்கு அந்த உபத்திரவம் பிடிச்ச இருமல் வரவே மாட்டிது. ஏனெண்டால் சீனியப்பு இப்ப நஞ்சியாலாவுக்கு  வந்திட்டாயெல்லே?"

நான் ஆறுதலாக அனுபவிச்சுக் கொஞ்சம் கன  நேரமாய்  நீந்தினன்.பேந்து கொஞ்ச  நேரத்திலை கரைக்கு ஏறிப் பாலத்துக்கு வந்தன் . தண்ணி சொட்டிச்சொட்டி வடிஞ்சிது. போட்டிருந்த சட்டையெல்லாம் ஈரத்தாலை உடம்போடை ஒட்டி இருந்திது. அப்பத்தான் என்ரை கால் ரெண்டுக்கும் என்ன நடந்திருக்கு எண்டு  கவனிச்சன். நம்பினால் நம்புங்கோ! வளைஞ்சு சொத்தியாய் இருந்த என்ரை கால் ரெண்டும் இப்ப என்னெண்டால் அண்ணரின்ரை கால் போலை உறுதியாய், நேராய், நிமிர்ந்திருக்கு. 

அப்ப நான் நினைச்சன், ஒருக்கால் வடிவாயும் வந்திருப்பனோ எண்டு. நான் எப்பிடி வடிவாய் இருக்கிறனோ எண்டு அண்ணரைக் கேட்டன். நான் வடிவான பொடியனாக மாறி இருக்கிறதை அவராலை பார்க்கேலும் தானே?
"கண்ணாடியிலை நீயே  பாரன்!"
கண்ணாடி எண்டு அவர் கருதிச் சொன்னது, ஆத்துத் தண்ணியைத் தான் பாருங்கோ. ஏனெண்டால் ஆறு தெளிவாய் பளிங்கு போலை வழுக்கிக் கொண்டு போச்சிது. பாலத்துக் கைபிடிக் குந்திலை நெஞ்சை வைச்சுப்  படுத்தபடி கீழை தண்ணியைப் பார்த்தன். அனக்கொண்டும் பெரிசாக என்ரை முகம் வடிவாகின மாதிரித் தெரியேல்லை. அண்ணர் அனக்குப்  பக்கத்திலை வந்து  தானும் குப்புறப் படுத்துக் கீழை ஆத்துத் தண்ணியைப் பார்த்தார். சிங்கநெஞ்சன் சகோதரங்கள் ரெண்டு பேரும் கனநேரமாக தண்ணியிலை எங்கடை  முகங்களைப் பார்த்தம். அண்ணர் எப்பவும் மாதிரியே பொன்னிறத் தலைமயிரும்,கூர்மூக்கும்,நீலக்கண்ணுமாய் அசல் வடிவாய் இருந்தார்.
என்ரை முகத்தை பார்த்தால் ........
அதே மொட்டை மூக்கு,........
அதே மண்ணிறக் கண், ............
புலுட்டைக் குதிரையின்ரை நேர்சீரில்லாத விறைச்ச வால் போல .........
அதே தலைமயிர்.

"சீ ... ...அனக்கு  ஒரு  பெரிய  மாற்றமும் தெரியேல்லை"எண்டு சொன்னன்.
ஆனால் அண்ணர் சொன்னவர் என்ன எண்டால், முன்னையை விடப் பெரிய மாற்றம் தெரியுதாமாம்.
"இப்ப முகம் நல்ல தெளிவாய், ரெத்தப் பிடிப்பாய், பசுந்தாய், செந்தளிப்பாய் இருக்கு" எண்டார்.
அவரும் சொல்லச் சொல்லத்தான் அனக்கும் உந்த விளப்பங்கள்  பிடிபட்டிது.

அந்தப் பாலத்து ஒட்டுக் குந்திலை கிடக்கேக்கை  நான் உணர்ந்ததெல்லாம்  என்னவெண்டால்,...
உந்தக் கந்தறுந்த இருமல், குக்கல் எல்லாம் இப்ப போய் விட்டிது,----நான் நல்ல சுகதேகியாக ஆகிட்டன் எண்டது தான். இனிப் பேந்து என்ன வேணும்? வடிவான முகத்தை வைச்சு நான் என்ன சாதிக்க? தலை தொட்டுக் கால் வரை என்ரை சதிரம் முழுக்க எந்த நேரமும் ஒரு புளுகம் பொங்கி வழிஞ்சிது.

வெயில் சூட்டிலை ஈர உடுப்பெல்லாம் காயும்மட்டும் அங்கயே கிடந்தபடி ஆத்திலை நீந்தின மீன் எல்லாம் பார்த்தம். கொஞ்சத்தாலை வீட்டை போக அண்ணர்  விரும்பினார். நானுந்தான்.  நான் இனிச் சீவிக்கப் போகிற எங்கடை குதிரைக்காறன் வளவையும், வீட்டையும் போய்ப் பார்க்க எண்டு சரியான ஆவலாத்தான் அனக்கும் கிடந்திது.
"சரி,சரி, வாரும் சீனியப்பு சிங்கநெஞ்சன் அவர்களே! அடியேன்  வசிக்கும் சிறு குடிலுக்கு வரும்படி அன்புடன் இருகரம்  நீட்டி  தங்களை அழைக்கின்றேன்!"
அண்ணர்  நாடக வசனம் பேசி பகிடி சேட்டை விட்டாலும், அவரின்ரை குரலிலை பட்சம் இருந்திச்சு.

அண்ணர்  பாதையிலை முன்னாலை போக , நான் பின்னுக்கு என்ரை நேரான,வடிவான ரெண்டு காலாலையும் புல்லை மிதிச்சு நடந்தன். நான் வைச்ச கண் வாங்காமல் கால் ரெண்டையும் பார்த்த படி போனன்.என்ன ஒரு சுகமான அனுபவமாய் கிடக்கு,இந்த ரெண்டு காலையும் கொண்டு நடக்கிறது! கொஞ்சத்தூரம் ஏற்றத்திலை ஏறின பிறகு தலையை நிமித்திப் பார்த்தன். அப்ப கண்ணுக்கு முன்னாலை செர்ரிப்பழப் பள்ளம் விரிஞ்சு கிடந்திச்சு.
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளைநிற செர்ரிப்பூ பூத்துக் கிடந்திச்சு.
அந்த வெய்யில் வெளிச்சத்திலை ;......
வெள்ளைநிற செர்ரிப்பூக்கள் சொரிஞ்சு கிடந்த பச்சை நிறப் புல்வெளி.......
தண்ணியை மூடி செர்ரிப்பூ மிதக்க  நடுவிலை அமைதியாக வழுக்கி ஓடின ஆறு........ ;
பார்க்க   வெள்ளிப்பூக்கள் தைச்ச பச்சைக் கம்பளத்திலை வெள்ளிநாடா போல  என்னதொரு வடிவான காட்சி!

அண்ணரைக் காணவேணும் எண்ட  தவிப்பிலை முதலிலை நான் உந்த வடிவான காட்சியைக் கவனிக்கவேயில்லைதான். என்னை மறந்து அந்தப் பாதையிலை நிண்டபடி அந்த வடிவான காட்சியைப் பார்த்தன். 
" உலகத்திலை இனி இல்லையெண்ட  வடிவான ஊர் உதுதான் இல்லையே,
  அண்ணர் ?"
" இனி இல்லையெண்ட வடிவான இடந்தான், ஆனால் உலகத்திலை  இல்லை."
எண்டார் அண்ணர் . அப்பத்தான் நாங்கள் இப்ப நிற்கிறது, நஞ்சியாலாவிலை எண்ட நினைப்பு வந்திச்சு.

செர்ரிப்பழப் பள்ளத்தைச் சுற்றிவர உசந்த மலை. பார்க்கப் பார்க்க நல்ல வடிவு. மலைச்சரிவுகளிலை ஆறுகளும், அருவிகளும் சங்கீதம் பாடினபடி பாயுது, பசந்த காலத்துக்கு நல்வரவு சொன்னபடி.  விளப்பமாய் சொல்லத் தெரியேல்லை ; அந்தக் காத்திலை கூடி ஒரு புதுமை. அள்ளி அள்ளிக் குடிக்க வேணும் போலை ஆசை ஆசையாய் கிடந்திது. அம்மளவு சுத்தமான காத்து. 

அண்ணருக்குச் சொன்னன், 
"ஒரு ரெண்டு கிலோ உந்த சுத்தமான காத்து ; அங்கினை ஊரிலை, வீட்டிலை உள்ள சனத்துக்கு அனுப்பி வைச்சால் நல்லாயிருக்கும்"
எண்டு நான் சொன்னன் . அந்த அடுப்படி அறையிலை, அந்த வாங்கிலை படுத்தபடி, சுத்தமான காத்துக்காக என்ரை நெஞ்சுக் கூடு  ஏங்கி ஏங்கி எத்தினை தரம் ஏறியிறங்கி  தவிச்சிருக்கும் எண்டதை நினைச்சுப் பார்த்தன். 

இங்கினை சுத்தமான காத்து தேவைக்கு  மிஞ்சி இருக்கு. என்னாலை ஏலுமான வரையிலை உறிஞ்சி இழுத்தன்; விட்டால் பிடிக்கேலாது எண்டது மாதிரி. அண்ணர் என்னைப் பார்த்துப் ' பக பக ' எண்டு சிரிச்சார்.

" காத்திலை கொஞ்சத்தை எனக்கும் விட்டு வை சீனியப்பு."

நாங்கள் நடந்த பாதை முழுக்க செர்ரிப்பூ சொரிஞ்சு கிடந்திது. காத்திலை ஆடி, ஆடி, சுழண்டு, சுழண்டு வெள்ளை  நிறப்  பூ  இதழ் எங்கடை தலைமயிரிலையும்,மேலிலையும் வந்து படிஞ்சிது. அனக்கு எண்டால் அந்த ஒற்றையடிப் பாதை வழியாய் நடக்க, நடக்க நல்ல ஆசையாய் இருந்திது. பாதை  முடியிற இடத்திலை , பச்சை நிறப் பேர்ப்பலகை இருக்கிற படலையும், குதிரைக்காறன் வளவும் வீடும் இருந்திது.

"சிங்கநெஞ்சன்  சகோதரர்கள்" அண்ணருக்கு வாசிச்சுக் காட்டினன் .
"நினைச்சுப் பாருங்கோவன் அண்ணர் !  நாங்கள் இஞ்சை  குடியிருக்கப் போறம் !"
" மெய்தான் சீனியப்பு! இனி எல்லாம் நல்லாய் இருக்கும், இல்லையே?"
அனக்குத் தெரியும். இங்கினை எல்லாம் நல்லாய் இருக்கும் எண்டு அனக்குத் தெரியும். அண்ணரும் இப்பிடித்தான் நினைப்பர் எண்டதும் அனக்குத் தெரியும். என்னைப் பொறுத்த மட்டிலை உந்த இடம் விட்டு வேறை எங்கினையும் போக நான்  மாட்டன்.

அதொரு வெள்ளைநிறம் அடிச்ச வீடு. யன்னல் நிலை, சட்டம், மற்றது வாசல் நிலை, கதவு எல்லாம் பச்சைநிறம். அது ஒண்டும் பெரிய வீடில்லை தான். ஆனால் நல்ல வடிவான வீடு. சுற்றவர பச்சைப் புல்லுப் படர்ந்த முற்றம். அதிலை வண்ண வண்ணமாய் வகை வகையான பூக்கள் பூத்திருந்திது. வளவிலை செர்ரி மரங்கள் கூடுதலாயும், காட்டு மல்லிகைச்செடி பத்தையுமாய் இருந்திது. வளவைச் சுற்றி கட்டையான, பாசி படர்ந்த, கல்லடுக்கு வேலி இருந்திது. அதிலை சிவப்பு, ஊதா, செம்மஞ்சள், மஞ்சள் நிறப் பூக்களோடை சில வகைக் காட்டு மூலிகைச் செடிகள். எதோ ஒரு சின்னக்காரியம் போலை வேலியைப் பாய்ஞ்சு கடந்தம். இப்ப வேலிக்குள்ளை, வளவிலை நிற்கிறம்.  அந்த வேலி ஒருவிதமான பாதுகாப்பைத் தருகிற மாதிரி ஒரு உணர்வு. எங்கடை எங்கடை வீட்டிலை, எங்கடை எங்கடை மட்டிலை இருக்கிற மாதிரிக் கிடந்திது.

    090920121194.jpg
அதோடை இன்னும் சில சங்கதி. அங்கை ஒரு துலாக்கிணறும்,மாலும் கூட இருந்திச்சிது. வீடும், மாலும் டானாப்பட இருந்திது. அந்த டானா முடக்கிலை ஏதோ கற்காலத்துக்குச் சேருமதியானது மாதிரி ஒரு வாங்கு. நல்லதொரு முடக்கும்,வாங்கும். அதிலை இருந்தபடி, எதையாவது பற்றி யோசிக்க,கதைக்க , சின்னக் குருவியளின்ரை போக்குவரத்தை விடுப்புப் பார்க்க  அல்லாட்டி பழச்சாறு குடிக்க வேணும் போலை இருந்திச்சிது.
" இது அனக்குப் பிடிச்சிருக்கு"
எண்டு அண்ணருக்குச்  சொன்னன்.
"வீட்டுக்குள்ளையும்  வடிவாயிருக்குமோ?"
"உள்ளை வந்து நீயே பாரன் சீனியப்பு!"
 எண்டு கதவடியிலை நிண்டபடி அண்ணர்  கூப்பிட்டார்.

நாங்கள் வீட்டுக்குள்ளை போக எண்டு காலை எடுக்கவும் ஒரு கனைப்புச் சத்தம் கேட்டிது.மெய்யாவே ஒரு குதிரையின்ரை கனைப்புச் சத்தந்தான்! அண்ணர் சொன்னவர்,
"வா முதலிலை மாலுக்குப் போய்ப் பார்ப்பம்"
அவர் மாலுக்குள்ளை  போனார். நான்பின்னாலை ஓடிப் போனன். ஒருக்கால் நினைச்சுப் பாருங்கோ! நா ஆ ஆ ன்,... ஓ  ஓ டிப்,.... போ ஓ ஓ னன்!  கொஞ்ச மணி நேரத்துக்கு முன்னம் உது என்னாலை நினைச்சுப் பார்க்கக் கூடிய காரியமே?

ஓ  ஓ ! நல்லதொரு குதிரை மால் தான். அங்கை மண்ணிறத்திலை வடிவான, ரெண்டு குதிரை நிண்டிது. எங்களைக் கண்ட உடனை தலையாட்டிக் கனைச்சுதுகள்.
"இது ரெண்டுக்கும் பேர் வியாழர் , வெள்ளியார் "
அண்ணர் அறிமுகம் செய்தார்.
"உது ரெண்டிலயும் எது உன்ரை எண்டு சொல்லு பார்ப்பம்?"
"பகிடி விடாதையும் அண்ணர். அனக்கு எண்டு ஒரு குதிரை இருக்கு எண்டு சொல்லி என்னைப் பேய்க்காட்ட வேண்டாம். நான் நம்பவும் மாட்டன்"ஆனால் நஞ்சியாலாவிலை ஒருத்தர் குதிரை இல்லாமல்  ஒண்டுமே சமாளிக்க ஏலாது எண்டு அண்ணர்  சொன்னவர்.
"குதிரை ஒண்டு இல்லாமல் ஒரிடமும் ஒரு மனிசர் போய்வரேலாது . அதோடை என்னெண்டால் சீனியப்பு, சிலநேரங்களிலை கனதூரம் நாங்கள் போய்வர வேண்டி வரும்."

கனகாலத்துக்குப் பிறகு இப்பிடி ஒரு நல்ல செய்தி என்ரை காதிலை விழுந்திது....... நஞ்சியாலாவிலை  சொந்தமாய் குதிரை வைச்சிருக்க வேணுமாம் ......அனக்கு குதிரை எண்டால் நல்ல விருப்பம் எல்லே? ......ஆகா என்ரை பாடு பறவாயில்லை. ஓ ஓ  என்ன ஒரு மெதுமையான மயிர் மூடின தேகம். அனக்கு  விளங்கேல்லை, இப்பிடியான ஒரு மெதுமை எப்பிடி வந்து சேர்ந்திது எண்டு. ரெண்டும் வலு அருமையாய்க் காணக் கூடிய நல்லவடிவா....ஆன குதிரை.  வெள்ளியாருக்கு மட்டும் நெற்றியடி வெள்ளை நிறமாய் இருந்த படியால் வெள்ளியார் எண்டு பேராய்ப் போச்சு.
"வியாழர் தான் என்ரை குதிரையாக்கும்"
எண்டு நான் ஒற்றைரெட்டை பிடிச்சன்.
"அந்தா கொத்தினாய்  பார் ஒரு கொத்து கோடாலியாலை ஒரு கல்லைப் பொத்தி. வெள்ளியார் தான் உன்னுடையது கண்டியோ?"


வெள்ளியார் என்னை மணந்து பார்த்திது. நான் அதுவரை முன்னை பின்னை ஒரு குதிரையின்ரை பக்கம்  போனதேயில்லை. ஆனால் அனக்கு ஒரு பயமோ பதகளிப்போ வரேல்லை. அனக்கும் வெள்ளியாருக்கும் முந்தின பிறவியளிலை  எதோ ஒரு தொடசல் இருந்த மாதிரி ஒருத்தரிலை ஒருத்தருக்கு ஒரு பட்சம் வந்திச்சிது."எங்களுக்கு முயலும் இருக்கு தெரியுமே சீனியப்பு?"
எண்டார் அண்ணர்.
"மாலுக்கு வெளியிலை கூட்டுக்குள்ளை  இருக்கு. அதுகளை நீ பேந்து பார்க்கலாம்."

ஓ! இவர் அண்ணர் பிள்ளையார் நான் பொறுத்துப் பேந்து போய் முயலைப் பார்ப்பன் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார் எல்லே?
"நான் இப்ப உடனடியாய் முயலைப் பார்க்க வேணும்"
எண்டன். அனக்கு முயல் வளக்க சரியான விருப்பம் .ஆனால் நாங்கள் இருந்த நகரத்திலை, பலதட்டுக்களாய் குடியிருப்புக்கள்  இருக்கிற வீடுகளிலை முயல் வளக்க வசதியில்லை.


பின்னாலை ஓடிப் போய்ப் பார்த்தன். என்ரை ராசா!, என்ன வடிவான முயல் மூண்டு. சும்மா குட்டிக்குட்டி  பஞ்சு மூட்டை போலை. புல்லையும், பூண்டையும் முசுமுசு எண்டு நன்னின படி. " எல்லாமே அதிசயமாய் கிடக்கு இங்கினை நஞ்சியாலாவிலை !"
எண்டு அண்ணரிட்ட சொன்ன நான்.
"நான் ஆசைப் படுகிறது எல்லாமே அனக்குக் கிடைக்கிது!"
" நானும் உதைத் தானே முதலிலையே  சொன்னநான்" எண்டார் அண்ணர். மெய்தான் அப்பிடித் தானே அந்த நேரமே, அங்கினை நாங்கள் இருந்த குடியிருப்பிலை , அடுப்படியிலை வைச்சு அனக்குச் சொன்னவர். அவர் சொன்னது மெய்யாகிப் போச்சு எண்டதிலை அனக்குப் புளுகம் தான்.

ஒரு சங்கதி, அதை ஒருக்காலும், எந்தக் காலத்திலையும், எந்தப் பிறவியிலையும் என்னாலை மறக்க ஏலாது. குதிரைக்காறன் வளவிலை அந்த முதல்நாள் இரவு, படுக்கையிலை கிடந்தபடி, முன்னையை மாதிரியே அண்ணரோடை  வளமை பறைஞ்சபடி இருந்ததை எப்பிடி மறக்க முடியும்?

முன்னையை மாதிரித் தான் இப்பவும் ஒரு அடுப்படி அறையிலை படுத்திருக்கிறம்.ஆனால் இது வந்து, முந்தி நாங்கள் குடியிருந்த வீட்டின்ரை அந்த அடுப்படி மாதிரி இல்லை. இங்கத்தையில் அடுப்படி சரியான பறணை, பழசு எண்டு நான் நினைக்கிறன். ஆனால் பழுது படாமல் நல்ல நிலைமையிலை இருக்கு. பெரிய தீராந்தியும், கப்பும்  கூரையை தாங்கி நிற்கிது. ஒரு பக்கச் சுவரை முழுக்கப் பிடிச்சபடி அடுப்பு மேடையும்,  அடுப்புக்கு நேரை மேலாலை புகைபோக்கியும் போகுது.அடுப்பு எண்டால் இப்பத்தையை மாதிரி மூடின பெட்டி அடுப்பு இல்லை. பழங்காலத்தைப் போலை நேரடியாக திறந்த நெருப்பிலை ஒரு சட்டியை சருவத்தை வைச்சுத் தான் சமைக்க வெளிக்கிடிற ஒருத்தர் பழங்காலம் மாதிரி சமைக்க வேணும். 

அடுப்படிச் சாலையிலை  நடுவிலை ஒரு மேசை. அதைப் போலை ஒரு உறுதியான, கனதியான மேசையைக் கண்டு பிடிக்கிறது கயிட்டமான  காரியம் எல்லே?. ஒவ்வொரு பக்கமும் நீள  நீளமாய்  மரத்திலை செய்த வாங்கு. நெருக்கி இடிபடாமல் ஒரு பத்துப் பேர் மட்டிலை இருந்து சாப்பிடலாம்.
" முன்னை அந்த வீட்டிலை இருந்த மாதிரியே இஞ்சையும் நாங்கள் ரெண்டு பேரும் அடுப்படியிலை படுப்பம். அம்மா வாற  காலத்திலை முன்  மண்டப அறையை அங்கினை பாவிச்சது போலை இங்கினையும் அவ புழங்கட்டுமன்."எண்டு அண்ணர் யோசினை சொன்னார். ஒரு அறையும், அடுப்படியும் மட்டும் தான் குதிரைக்காறன்  வளவு வீட்டிலையும். எங்களுக்கு அதை விடப் பெரிய இடவசதி தேவையாய் இருக்கேல்லை. எப்பிடிப் பார்த்தாலும் முந்தின குடியிருப்பை விட ரெண்டு மடங்கு பெரிசு இந்த வீடு.

அப்பத்தான் ஞாபகம் வந்தாப் போலை அம்மாவுக்குத் துண்டு எழுதி வைச்சது பற்றி அண்ணருக்கு சொன்னன்.
" நஞ்சியாலாவிலை  திரும்ப சந்திப்பம் எண்டு அம்மாவுக்கு எழுதி வைச்சனான். எந்தக் காலத்திலை வந்து சேருவாவோ ? ஆர் கண்டது?"
என்னட்டை இருந்து பெருமூச்சுப் பறிஞ்சது

"எப்பிடியும் அவ வர கொஞ்சம் கனகாலம் பிடிக்கும் தான்.ஆனால் அவ வாற காலத்திலை அவவுக்கும், அவவுக்கு விருப்பம் எண்டால் அவவின்ரை தையல் மெசினுக்கும் முன் மண்டப அறையிலை தாராளமாய் இடம் இருக்கு"எண்டு அண்ணர் சொன்னவர்.
நான் என்னத்தை விரும்பினநான் எண்டு தெரியுமே? நான் விரும்பினது எல்லாம் ....
அந்தப் பறணைப் பழங்கால வீட்டிலை,....
அந்தப் பறணைப் பழங்கால அடுப்படி அறையிலை,....
அந்தப் பறணைப் பழங்கால வாங்கிலை படுத்தபடி.....
என்ரை ஆசை அண்ணர் யோனத்தானோடை வளமை பறைஞ்ச படி ......
அடுப்பிலை  எரியிற நெருப்பு வெளிச்சம் சுவரிலை படங்கள் ஆட்டிக் காட்ட....
யன்னலுக்கு வெளியாலை செர்ரி மரத்தின்ரை பூவுள்ள கிளைகள் காத்திலை கூத்தாட....
இதை எல்லாம் கண்ணாலை பார்த்தும், காதாலை கேட்டும், மூக்காலை மணந்தும், வாயாலை உருசை பார்த்தும், உடம்பாலை உணர்ந்தும் ஆசையோடை அனுபவிக்கிறதைத் தான்!

அடுப்பிலை நெருப்பு வரவரக் குறைஞ்சு கொண்டு போய்க்  கடைசியிலை தணலாகிப் போச்சுது. மூலை  முடக்குகளுக்கை இருட்டு பெருகத் தொடங்கிச்சிது . அனக்கும் வரவர நித்திரை தூக்கி அடிச்சிது.  ஒரு ஈளை, இழுப்பு, இருமல் ஒண்டும் இல்லாமல் நானும் அங்கை படுத்திருந்தன்.
அண்ணரும் கதை சொன்ன சீர்தான். அவரும் சொல்லிறார்,சொல்லிறார், ஒரு கணக்கிலை கிசுகிசுக்கிற மாதிரிக் கேட்டிச்சிது. கடைசியிலை நித்திரையாகிப் போனன். இப்பிடியாக மறக்கேலாத ஒரு இரவுப் பொழுதாக அனக்கு குதிரைக்காறன்  வளவு வீட்டிலை முதல்நாள் இரவு வந்து அமைஞ்சிது.



                                                   (விடியட்டும் சந்திப்பம்)

சொல்விளக்கம் :
தறைஞ்சு - ஆணி அறைந்து 
கனக்கத் தரம் - பல தடவை 
பெலத்து< பலத்து-பலமாக
பேந்து-பெயர்ந்து -பின்பு 
அங்கினை- அங்கே 
இங்கினை-இங்கே 
பணிய- கீழே 
பங்கை- அங்கே 
குந்து - இடுப்பளவு வரை உயரமுள்ள ஒருவர் இருக்குமளவு அகலமான  படி, /கைப்பிடி சுவர்
ஒட்டு-இடுப்பளவு வரை உயரமுள்ள ஒருவர் இருக்குமளவு அகலமான  படி, /கைப்பிடி சுவர்
தலையாலை நிண்டு தெண் டிச்சாலும்- என்னதான் முயன்றாலும் 
புளுகம் < புளகம்- மகிழ்வு 
அனுங்கல் -மெதுவான அரற்றல் ஒலி 
எக்கணம்<இக்கணம் - உடனே ,இப்போது 
மட்டுக் கட்டுதல்- அடையாளம் காணுதல் 
கனகாலம் -பலகாலம் 
தாழுதல்-மூழ்குதல் 
தாண்டு <தாழ்ந்து-அமிழ்ந்து 
நிண்டிட்டிது-நின்று விட்டது 
சொத்தி- கோணல் 
கன நேரம் -பல நிமிடங்கள் 
பசுந்து-பொலிவு 
விளப்பம் -விளக்கம் 
கந்தறுந்த= கந்து(வாழ்வாதாரம்)+அறுந்த
சதிரம்- சரீரம் 
பசந்தகாலம்-வசந்தகாலம் 
கட்டை- பதிவு, குள்ளம் 
பேய்க் காட்டுதல்-ஏமாற்றுதல் 
பாடு பறவாயில்லை - நிலைமை நல்லது.
ஒற்றை ரெட்டை பிடித்தல்- ஊகித்து தடுமாறுதல் 
(சுவீடன் மொழி வழக்கில் )
கோடாலியால் கல்லைக் கொத்துதல் -பிழையாக நினைத்தல் 
தொடசல்-தொடர்பு 
நன்னுதல்- மெதுவாக தின்னுதல், அறுத்தல்,வெட்டுதல் 
வளமை பறைதல்-பலதும் பத்தும் பேசுதல் 
இங்கத்தையில் < இங்குத்தயில் < இங்குற்றயில் =இங்கு+உற்ற+இல் -இங்குற்ற விதத்தில் 
அங்கத்தையில் <அங்குத்தயில்<அங்குற்றயில் = அங்கு+உற்ற+ இல்- அங்குற்ற விதத்தில் 
என்னட்டை- என்னிடம்,என்னிடமிருந்து 
பறணை -புராதனம், அளவில் பெரியது 
உ+ம் : பறணை சைக்கிள் -புராதன கால சைக்கிள் 
              பறணைச்  சட்டை -அளவில் பெரிய சட்டை 
இப்பத்தைய<இப்போதைய 
தீராந்தி -வளை 
கப்பு- தூண் 
அடுப்படிச் சாலை -அடுப்படி அறைத் தரை 
பாவித்தல், புழங்குதல்- உபயோகித்தல் 
உருசை-உருசி 

Kommentarer