பொன்னுக்குட்டி!1

                                                    பொன்னுக்குட்டி!

Levande norsk 6. skuleår பொத்தகத்திலிருந்து

நொர்ஷ்க்(நோர்வேஜியன்மூலம்:JACOB  B.BULL                                
தமிழாக்கம்.குணபாலன்


கதைக்களம்மலையும்,வயலும்,காடும்,கடலும்அருகருகே காணப்படும்
வடபுலவழி(NOR(TH) WAY) ஆன நோர்வே நாடு.
கதைக்காலம்ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே.


பாதிரிவளவு 

அந்த நாளைகளில் எங்கள் தகப்பனார் இசுத்திரண்டால் கோயிற்பற்றிலே பங்குத்தந்தையாக இருந்தவர்பணிய (lower) இசுத்திரண்டால் கிராமத்திலே ஒரு பெரிய பாதிரிவளவு இருந்ததுஎன்னுடைய சின்னவயசுப்பராய காலத்திலே நாங்கள் அங்கே குடியிருந்தோம். பாதிரிவளவிலே பெரியதொரு பாதிரிமாளிகைபணியாளர் குடிமனைகால்நடைக் கொட்டாரம்குதிரைமால்கொல்லுப் பட்டறைகலப்பை முதலிய கருவிகள் வைக்கும் கொட்டில்கூரை உச்சியில் மணியுடன் தானியக் களஞ்சியம் எனப் பல கட்டடங்கள்இருந்தன.

கால்நடைக் கொட்டாரம் 



தானியம்இறைச்சி வற்றல்கள்பதப்படுத்திய பழப்பாகு முதலியவை 
சேமித்து வைக்கப்படும் களஞ்சியம்



கால்நடைக் கொட்டாரத்திலே ஒரு பத்துப் பன்னிரண்டு பசுஇரண்டு நாம்பன் மாடு,கிடாயும் 
மறியுமாக ஒரு இருபது மட்டில் கம்பளியாடு , இரண்டு,மூன்று சாவல் ,ஒரு பதினைந்து பேட்டுக்கோழிஏழெட்டு பன்றி என்றுநிறைந்து இருக்கும்பாதிரிவளவிற்கு சேருமதியான கமத்துநிலத்தில் வேலைக்கும்மற்றவெளி வேலைகளுக்கும்என்று நாலு குதிரை இருந்தது.

அந்தக் குதிரைகளில் பொன்னுக்குட்டியும் ஒன்றுபொன்னுக்குட்டிபாதிரிவளவில் பாதி 
செல்லப்பிள்ளைபாதி செல்வாக்கின் சின்னம்யாரென்றாலும் பொன்னுக்குட்டியை 
தொட்டுத்தடவி மேலைத்தேய்த்துமெருகூட்டலாம்தீன் கொடுக்கலாம்ஆனால் பாதிரிவளவின்தலைமைப் பணியாளான ஊலா யோன்சன் மட்டுமே பொன்னுக்குட்டியைத் தொட்டுச் 
சேணமிடவோவண்டியிற் பூட்டவோ முடியும்குதிரைச்சவுக்கு அதன் மேலிலே 
பட்டதேயில்லைஊலாவுக்கு அதில் இட்டமேயில்லைஅடங்காப் பிடாரியானகுதிரைக்குத்
தான் சவுக்கடி தேவையாம்ஊலா சொல்லுவார்.

தெருவாலேவழியாலே இன்னொரு குதிரைவண்டி பொன்னுக்குட்டிக்கு முன்னாலே 
முந்தியடித்துக் கொண்டு போகட்டும் பார்ப்போம்பொன்னுக்குட்டி விடமாட்டாதுபாதிரி
வளவில் வளர்ந்த பொடியன்களான எங்களுக்குக் குதிரைவண்டிச் சவாரி என்றால்அதுவும் 
பொன்னுக்குட்டி வண்டி இழுக்குமென்றால் பிறகுஎன்னத்தை பறைவான்ஒரே புளகமும்
பெருமிதமும் தான்குறிப்பாக நத்தார்க்காலத்து நடப்பைப் பற்றிச்சொல்லவேண்டும்
நத்தார்க்காலம்வடந்தைக்காலம் (winter). சிந்து (snow) பெய்து அனைத்துமே
வெண்மையாக இருக்கும்கூதிர்காலத்தில் இலையாடை களைந்து தவக்கோலம் கொண்ட 
மரவகையும்பிறத்தியார் முன்னே ஆடை மாற்றவே விரும்பாத தேவதாரு(pine) மரவகையும் 
வெண்ணிறத்தில் சிந்து ஆடைஅணிந்து தேவதைகளாக மாறியிருக்கும்வீடுவாசல்
வழிவாய்க்கால்கோயில்குளம் என்று எங்கேபார்த்தாலுமே சிந்து படிந்து வெண்மையாக 
இருக்கும்கதழ்வண்டிகளை (sledge) குதிரைகள் இழுக்கும்.

ஓவியர்: எட்வார்ட் முங்க் (Edward Munch)
1912





நத்தார்ப் பூசை முடிய அனேகமாக மற்ற எல்லோரும் வெளிக்கிட்ட பின்னே பாதிரிவளவின் 
வண்டியை இழுத்துக்கொண்டு பொன்னுக்குட்டி கிளம்பும்முன்னாலே ஒரு பத்துப்பன்னிரண்டு கதழ்வண்டியும்குதிரையும் போய்க்கொண்டிருக்கும்சும்மா விடுமே பொன்னுக்குட்டிசும்மா காற்றுப் போலே கடுகதியில் பறக்கும்ஆடைக்குள் மறையாத முகத்தை வடந்தைக்குளிரைச் சேர்த்துக் காற்று அறைந்து உரஞ்சும்ஊசியாகிக்குத்தும் குளிர்காற்றுப் பட்டுக் 
கண்ணிலிருந்து வடியும் கண்ணீர் கீழிறங்காமல் பின்னே காதை நோக்கிச்சிதறும்செவிமடல் விறைத்துச் சிவக்கும்காற்றாகிக் கடுகி விரையும் கதழ்வண்டியைத் தன் கட்டுக்குள்
வைத்திருக்கும் முயற்சியில் அந்தக்குளிரிலும் பொடியாக வேர்வை அரும்ப ஒரு அரசனின் 
கம்பீரத்துடன் ஊலா யோன்சன் வண்டியைச் செலுத்துவார்பாதிரிவளவின் வளைவிலே 
ஆலியாக(ice) இறுகி உறைந்துபோயிருக்கும் துரவைத் தாண்டும்போது "முக்கால்வாசி ஊரை இண்டைக்கும் வெண்டாச்சுஎன்று கூவுவார்.

பொன்னுக்குட்டி சின்னப் பிள்ளைகளுடன் நல்லாக அணையும்.எனக்கு நேரே இளையவனான யுகான்னெசு மீது பொன்னுக்குட்டிக்கு தனிப் பட்சம்யுகான்னெசு கிட்டப் போனால் காணும்அவன் தலையை உடம்பைமணக்கும்நக்கும்.அவனும் பொன்னுக்குட்டியின் கழுத்தைக் கட்டிப் பிடிப்பான், மேலைக்காலைத் தேய்த்து மெருகூட்டுவான்தீன் கொடுப்பான்கொஞ்சிக் 
கொஞ்சிச் செல்லம் பொழிவான்கதைப்பான்.பொன்னுக்குட்டியும் சின்னஞ்சிறிய சீறல்கள், 
தலையாட்டல்கள் எல்லாம் போட்டபடி ஏதோ ஒருவகையில் அவனுடன் கதைக்கும்மற்றும்படி சிலநேரம் அவன் பிடரிமயிரைவாலை பிடித்து இழுத்துபண்ணும் அரியண்டம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்.காலத்தின் கணக்கும் ; பொன்னுக்குட்டியின்விதியை யுகான்னேசுவுடன்முடிச்சுப் போட்டிருந்தது என்பது அப்போது ஆருக்குத்தான் தெரியும்?
                                                
அந்தமுறை வடந்தைக்குளிர் கடுமையாக வாட்டி வதைத்ததுஅடுத்துத் தொடுத்து மாசக் 
கணக்கிலே வடந்தைக் குளிர் மறை எண் நுப்பது நுப்பத்தஞ்சுக்கிடையில் ஊசாடிக் கொண்டு இருந்ததுபாதிரிவளவின் வேலியை அண்டி அற்புதமானதொரு சிற்றருவி பாய்கிறதுகொஞ்சம்ஒரு பா (plate) போலநீட்டிக்கொண்டிருக்கும் பாறையும்அதிலே வழியும் அருவியும் ஒரு 
கனவுலகத்தைக் காட்டும்கூரையாகஅமைந்த பாறையும் பாதுகாப்பானதாக இருந்தது.
வழமைபோல் வடந்தைக்காலத்தில் சிற்றருவியும் ஆலியாகி(ice) உறைந்து போனதுமேலிருந்துகீழே பாய்ந்து உறைந்த அருவி ; அற்புதமானதூண்களாக.....,சுவராக......,தொங்குதிரையாக.....,தோரணங்களாக....,மாயமானதொரு பளிங்கு மாளிகையாக....,பலவிதமான தோற்றங்களை 
எங்கள் மனக் கூத்துக்களுக்கு ஏற்றபடிகாட்டும்நாங்களும் மாயமந்திரக் கதைகளின் 
பாத்திரங்களாக மாறி விளையாடுவோம்அம்மா வந்து அதட்டிக் கூப்பிடும் வரை;நேரகாலம் 
தெரியாது...,விறைக்கும் குளிர் உறைக்காது..., வேளைகாலத்தோடு மெல்லப்பரவும் இருட்டும் வெருட்டாதுஆலியாகிப் பளிங்காகி உறைந்துபோன ஆற்றுப்படுக்கையும் பலவிதக்
கதைகளைப் பறையும்.ஆற்றுப் படுக்கையை உற்று ஊடுருவிப்  பார்த்தால் கருமையாக 
மருமங்கள் நிறைந்த நீரோட்டத்தையும் ஆழத்தில் காணலாம்கீழே காது வைத்துக் கேட்டால் செவிகளிலே தன் மன ஆழத்தின்மருமச் சங்கதிகளைஅது மெல்ல ஓதும்.



எனக்குப் பத்து வயசு.யுகான்னேசுக்கு அப்போது ஐந்து வயசுஒரு பல் விழுந்துவிட்டது
பள்ளிக்குப் போகும் பராயம் வந்து விட்டது என்று அம்மா அடிக்கடி சொல்லுவாகோடை 
முடியப் பள்ளியிலே சேர்க்கலாம் என்றுஅப்பா சொன்னார்ஆற்றுப் படுக்கையில் விளையாடப் போய்த்தான் யுகான்னெசுக்குட்டி வருத்தம் தேடிவந்தான்நுப்பத்தொன்பது நாற்பதிலே அனல் பறக்கக் காய்ச்சல்முட்டுத் தடிமன்மூச்சு கொறகொற என்று இழுக்க இருமல்.... ஐயோஉது வேறொன்றுமில்லை . ஊருக்குள்ளே பாலர்விருத்தர் என்று இன்னார் இனியார்என்று பாராமல் படுக்கையில் போட்ட பயங்கர வருத்தமேதான்சில வயசு போன சனங்களையும் பரலோகம்
அனுப்பின சளிச்சுரம் தான் அது. ஒரு பரிகாரியை அவசரத்துக்குப் பிடிக்க வேண்டுமென்றாலும் ,ஐம்பது கட்டைதூரத்தில் இருக்கும் தீன்சேத்துக்குத் தான் போக வேண்டும்.

யுகான்னெசுக்குட்டி வருத்தத்தில் விழுந்து மூன்றாம் நாள்இருள் விலக விருப்பமில்லாமல் பொழுதை இறுக்கிகட்டிப் பிடித்திருக்கும் வடந்தைப் பருவத்துக் காலை நேரம்அன்றைக்கு 
என்று பார்த்து ஆலிக்கட்டிகளைஅறைந்து வீசியபடி சுழிக்காற்றுடன் புயல் அடித்ததுஅப்பா 
பதற்றத்துடன் ஊலாவின் குடிமனைக்குள்நுழைந்தார்ஊலா காலைத்தீனைத் தின்று 
முடிக்கவில்லை.
"ஊலாநீ இப்ப உடனடியாப் பரியாரியாரைக் கூட்டிவர வெளிக்கிடு"
கதவினருகேயே நின்றபடி அப்பா சொன்னார்.
"நிலைமை என்ன மோசமே தேவரீர்?" ஊலா கேட்டார்.
"ஓம் கொஞ்சம் பயப்படும் படியாத்தான் கிடக்கு"
ஊலா கடைசி மூன்று வாய் சாப்பாட்டையும் அவதியவதியாகத் திணித்தார்கரண்டியைக் 
கையால் துடைத்துவிட்டு எழுந்தார்.
"இப்ப வெளிக்கிட்டு எப்ப மட்டிலை திரும்புவாய் ஊலா?" அப்பா கவலையுடன் கேட்டார்.
"சொல்லத் தெரியேல்லை.போகவர நூறுகட்டைக்குக் குறையாமல் ஓட்டம்வடந்தைக்
காலத்திலை....வழமையாகவே தீன்சேத்துக்குப் பாதை உதவாதுபத்தும் பத்தாததுக்கு 
இண்டைக்கு எண்டு பார்த்து ஆலிப்புயலும் சுழட்டி அடிக்கிதுஎன்று இழுத்தார் ஊலா.
"அப்பிடி எண்டால் நாளைக்கு வெள்ளாப்புக்கு முன்னம் வரேலாதுஇல்லையே?"அப்பாவின் 
முகத்தில் பயம்அப்பியதுஊலா ஒரு நுணுத்தம் (நிமிடம்யோசித்தார்பிறகு ஒரு தெளிவுக்கு 
வந்து;
"பொன்னுக்குட்டியைக் கூட்டிப் போவம் தேவரீர்!" என்று அப்பாவின் மனதை ஆறுதல் 
படுத்தத் தெண்டித்தார்அப்பா நாலு எட்டு நடந்தார்நெற்றியைத் தடவிக் கொண்டார்;
"அப்ப இரவைக்கு முன்னம் வந்திடலாமே ?" என்று கேட்டார்.
"என்னாலை ஏலுமான மட்டிலை வலு கெதியிலை வரத் தெண்டிக்கிறன்என்று ஊலா 
கம்பளியும் தோலுமான வெளியாடைகளை பக்குவமாக அணிந்து கொண்டார்.
"ஓமடாப்பாஉனக்குப் புண்ணியமாப் போகும்சுறுக்கா வரப்பார்ஒரு உசிரைக் காப்பாத்திற காரியமெல்லே?" கெஞ்சுவது போல கேட்டார் அப்பா
"தேவரீர் கவலையை விடுங்கோகர்த்தர் காப்பாத்துவார்"

ஊலா குதிரைமாலில் இருந்து  பொன்னுக்குட்டியைக் கூட்டிவந்தார்மற்றப் பணியாளர் பாரம் குறைந்த கதழ்வண்டியைக் கொண்டு வந்தனர்வண்டியிலே பொன்னுக்குட்டியை ஊலா 
பூட்டினார்சலங்கை மாலையும்கழுத்துமாக என்றைக்குமில்லாத பொலிவும்செந்தலிப்புமாக பொன்னுக்குட்டி இருந்ததுஅதன் கருவிழிகள்அழகாகப் பளபளத்தனஅப்பா திரும்பவும் 
அவதியாக வெளியே ஓடிவந்தார்.
"நிலைமை எக்கச்சக்கமாகப் போய்க்கொண்டிருக்கு ஊலாஎம்மளவுக்குக் கெதியா வண்டிலை ஓட்டேலுமோஅம்மளவுக்குக் கெதியா ஓட்டு"   
"சரி தேவரீர்!" ஊலா மூக்கணாங்கயிற்றைப் பற்றினார்.
"கொஞ்சம் பொறு ஊலா!" அப்பா குதிரைமாலுக்குள் ஓடிப்போய்ச் சவுக்கை எடுத்து வந்து 
நீட்டினார்.
"இண்டை மட்டுக்கு இதைப்பாவிவாற பாவம் என்னை வந்து சேரட்டும்"
"தேவை எண்டால் பார்ப்பம்"என்ற ஊலாவின் குரலில் எரிச்சல் தெரிந்ததுபொன்னுக்குட்டியைஅப்பாதடவினார்நானும் முகத்தோடு முகம் வைத்து தலையை,உடம்பைத் தடவி பயணம் அனுப்பினேன்.
"ம்சுறுக்காப் போய் சுறுக்காத் திரும்பி வாங்கோகர்த்தர் உங்களோடை துணை வருவார்
சிலுவைக்குறி இட்டு வாழ்த்தி அனுப்பினார் அப்பாவண்டி வெளிக்கிடவும் மணி ஆறு அடிக்கவும்சரியாக இருந்தது .

அன்றைய பொழுது ஒரு சுமையான நீண்ட பொழுதாக வீட்டிலிருந்த எங்களுக்கும்வடந்தைப் புயலையும் பாராது வெளியே சென்ற ஊலாவுக்கும் பொன்னுக்குட்டிக்கும் ஆகிப் போனது
வருத்தத்தின் அகோரத்தில் தம்பி யுகான்னெசு வாடிய கொடிபோலத் துவண்டு போய்க் 
கிடந்தான்நேரம் போகப்போக ஆபத்து அதிகரிப்பதை என் பெற்றோர் முகங்கள் காட்டின
அதை விளங்கிக் கொள்ளக் கூடிய பராயந்தான் எனக்கும்அச்சம் என்னைப் பிடித்து 
உலுப்பியதுமனத் திரையில் பல பயங்கரப் படங்கள் விரிந்தனஇழவுவீடு...,சவக்காலை..., 
சவ அடக்கம்..., பரியாரியார்..., மருந்துக் குளிகைகள், குடிநீர்..., யுகான்னெசுவின் கூத்து 
குழப்படி..., அம்மாவின்சிரிப்பு..., எல்லாமே வந்து போயின.

இப்படியான பற்பல நினைவுகளிலும் அல்லாடியபடி வெளியே வந்தேன்புயல் பின்னேரம் நாலு 
மணியின் மேலே கொஞ்சம் குறைந்ததுஆனாலும் அடிக்கடி ஆலிக்கட்டிகளை வாரியடித்துச் சேட்டை விட்டபடி இருந்ததுகுளிருக்குத் தலையைக் காதுகளைப் பாதுகாக்கும் கம்பளிக் 
குல்லாயும் இல்லாமல் , செவிமடல்இரண்டும் குளிரில் விறைத்துப் பகபக என எரிய.., 
கண்ணால் வழிந்த கண்ணீர் கன்னத்தில் உறைய.., எனக்குஎதுவும் உறைக்கவில்லை.
காதிரண்டும் பொன்னுக்குட்டியின் சலங்கைச் சத்தத்தை நாடித் தவித்தன.
"பொன்னுக்குட்டி இரவுக்கு வந்திடும்...இரவுக்கு வந்திடும்..." என்று இடைக்கிடை 
மென்மையாகத் தவழ்ந்தகாற்று காதிலே ஓதுவது போலே இருந்ததுஏதாவது அற்புதத்தை 
நடத்தி என் தம்பியைப் பிழைக்கவைக்கும்படி கர்த்தரை மன்றாடியபடி நின்றேன்.
                                                                                                                                       (தொடரும்)



கால்நடைக் கொட்டாரம்-farm house
நாம்பன்-காளைமாடு
கமத்துநிலம்-விவசாயநிலம் 
மேல்-உடம்பு
மெருகூட்டல்-polish  செய்தல் 
தீன்-உணவு 
புளகம்-புளுகம்,மகிழ்ச்சி
என்னத்தைப் பறைவான்?-என்னத்தைச் சொல்வது?

தமிழ் ஆர்வலர்,ஆய்வாளர் இராம.கி அவர்களின் பரிந்துரைப்படி 
வடந்தை-winter
சிந்து-snow
ஆலி-ice
கதழ்வண்டி-sledge 
நுணுத்தம்-நிமிடம் 

துரவு-சிறு நீர்நிலை,குட்டை
அணையும்-சேரும்
பட்சம்-அன்பு
அரியண்டம்-தொந்தரவு
மாசக்கணக்கிலே  -மாசங்களாக 
மறை எண் -minus எண் 
நுப்பதுமுப்பது
பா-plate 
வேளைகாலத்தோடு-நேரம் முந்தி
செல்லம் பொழிவான் - ஆசையாக அன்பாக கதைப்பான் 
பாலர் விருத்தர் -பிள்ளைகள் முதியோர்
இன்னார் இனியார்-வேண்டாதவர் வேண்டியவர் 
பரிகாரி-வைத்தியர்
கட்டை-ஆங்கில அளவு முறையில் மைல்
வருத்தம்-நோய் 
எப்ப மட்டிலைஎந்நேரம் அளவில் 
தெண்டித்தல்-முயற்சித்தல்
இரவைக்கு-இரவுக்கு
வெள்ளாப்பு-அதிகாலை 
செந்தலிப்பு-செந்தளிப்பு,செழிப்பு 
சுறுக்கு-விரைவு
கெதியாக-கதியாக,விரைவாக
பாவி-பிரயோகி, உபயோகி 
கால்நடைக் கொட்டாரம்-farm house
நாம்பன்-காளைமாடு
கமத்துநிலம்-விவசாயநிலம் 
மேல்-உடம்பு
மெருகூட்டல்-polish  செய்தல் 
தீன்-உணவு 
புளகம்-புளுகம்,மகிழ்ச்சி
என்னத்தைப் பறைவான்?-என்னத்தைச் சொல்வது?

Kommentarer