சிங்கநெஞ்சன்

    

சிங்கநெஞ்சன்!

மூலக்கதை : Bröderna Lejonhjärta



                                                 

                                                             எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                    (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                           (14/11-1907 --- 22/01-2002)

                                                 தமிழாக்கம் :  ந. குணபாலன்

               துடிப்பு 1 : என்ரை அண்ணர் யோனத்தான் !


                        
நான்இப்ப என்ரை அண்ணர்  யோனத்தான் சிங்கநெஞ்சன் பற்றிச் சொல்லப் போறன். நான் சொல்லப் போறதைக் கேட்க ஏதோ ஒரு வீரதீர சாகசக் கதை , ஆவிக்கதை கேட்குமாப் போல இருக்குந்தான். இருந்தாலும் அம்மளவும் மெய்.ஆனால் அனக்கும் அண்ணருக்கும் மட்டும் தான் இது தெரியும். வேறை ஆருக்குமே தெரியாது. 

 அண்ணரின்ரை  பதிவுப்  பெயர் யோனத்தான் சிங்கம் எண்டதுதான். ஏனெண்டால் சிங்கம் எண்டது எங்களுக்கு குடும்பப்பேர் எல்லோ? அனக்குப் பேர் கார்ல் சிங்கம்; அம்மான்ரை பேர் சிக்றி சிங்கம். அப்பர் வந்து அனக்கு இரண்டு வயசா இருக்கேக்கை கப்பலுக்குப் போனவராம், பேந்து நாங்கள் ஆருமே அவரைப் பற்றி எதுவுமே கேள்விப் படேல்லை. பேர் அக்செல் சிங்கம்.நான் இப்ப இஞ்சை சொல்ல வாறது என்னெண்டால் என்ரை அண்ணர்  யோனத்தான் சிங்கம்; எப்பிடி யோனத்தான் சிங்கநெஞ்சன் எண்டு பேர் எடுத்தவர்  எண்டது பற்றித்தான். அதோடை சிங்கநெஞ்சன் எண்டு பேர் வந்தபிறகு நடந்த நம்பவே முடியாத சங்கதிகளைப் பற்றியுந்தான்.

தம்பிக்காறன் நான் சாகக் கிடக்கிறன் எண்டு அண்ணருக்கு எப்பவோ தெரியும். நான் நினைக்கிறன்; மற்ற எல்லாருக்குமே அது பற்றித் தெரிஞ்சிருக்க வேணும், என்னைத் தவிர. அடிக்கடி இருமலும் தடிமனும்,சளியுமாக வருத்தம் சுகயீனம் எண்டு நான் வீட்டிலை கிடக்கிறதாலை; 'கெதியாப் போய்ச் சேரப் போறான் பொடியன்' எண்டு என்னைப் பற்றி பள்ளிக்கூடத்திலையும் கதைச்சிருப்பினம்.கடைசி ஆறு மாசத்திலை ஒரு நாள் கூட நான் பள்ளிக்கூட வாசல் மிதிச்சதில்லை. அம்மாவிட்டை சட்டை தைக்க வாற பொம்பிளையளுக்கும் இது விடயம் தெரிஞ்சிருக்கும். இப்பிடித்தான் அவளவையிலை ஒரு அக்கா அம்மாக்கு ஆறுதல் சொன்னதை நான் கேள்க்க வேண்டிப் போச்சு. நான் நித்திரையாக்கும் எண்ட நினைப்பிலை அவையள் ரெண்டு பேரும் கதைச்சதை நான் கேட்டிட்டன். நான் ஒரு அசுகையும் காட்டாமல் நித்திரை போலக் கள்ளடியாக் கிடந்திட்டன். நான் சாகப் போறன் எண்ட சங்கதி எனக்கும் தெரியும் எண்டதை காட்டிக்கொள்ள எனக்கு புறியமில்லை.

எனக்கு ஒரே அழுகை அழுகையாக வந்தது. பயம் பயமா கிடந்தது. அம்மா பாவம் அவ படுற பாட்டுக்கை உதை ஒண்டையும் காட்டிக் கொள்ள நான் விரும்பேல்லை. அண்ணர்  வந்தவுடனே அது பற்றிக் கேட்டன். 

 "அண்ணர் ! உமக்குத் தெரியுமே? நான் சாகப் போறனாம் ?" அழுது கொண்டு கேட்டன்.
அண்ணர்  உடனை மறுமொழி ஒண்டும் சொல்லேல்லை. சொல்லவும்  விருப்பம் இல்லாமல் இருந்திருக்கக்கூடும். கொஞ்சம் யோசிச்சுப் போட்டு,
 "ஓம். எனக்குத் தெரியும்." எண்டு சுருக்கமாய் சொன்னார் . நான் இன்னும் கூடுதலாய்  அழுதன் .  
  " இப்பிடி ஒரு பயங்கரம் ஆருக்குமே வரக் கூடாது. பத்து வயசு ஆகுமுன்னம் ஆருமே சாகக் கூடாது." நான் அனுங்கினன் .
 " என்ரை சீனியப்பு அதொண்டும் பெரிய பயங்கரமாய் இராது. " என்னைக் கட்டிப் பிடிச்சு கொஞ்சினார்   அண்ணர் . 
 "என்ரை சீனியப்புவுக்கு அப்ப  நல்ல சுகமாய்,சுவாத்தியமாய் இருக்குமெண்டு   
   நான் நம்புறன்"
"நீர் சும்மா போம் அண்ணர். பகிடி விடுறீரே? செத்துப் போய்  மண்ணுக்குள்ளை அடக்கமாய் இருக்கிறது எப்பிடி சுவாத்தியமாய் இருக்கும்?"
 "மண்ணுக்குள்ளை கிடக்கிறதோ? உதென்ன பேய்க்கதை! உந்த உடம்புக்கூடு மட்டும் மண்ணுக்குள்ளை கிடக்கும். என்ரை சீனியப்பு நீ இந்த இடம் விட்டு வேறை ஒரு இடத்துக்குப் பறந்து போய்  விடுவாய். கண்டியோ?"
"எங்கினையாம் ?" நம்பேலாமல் கேட்டன்.
"நஞ்சியாலாவுக்கு " நஞ்சியாலா!ஏதோ  எல்லாருமே அறிஞ்ச ஒரு சங்கதி மாதிரி வலு சுகமா சொன்னார் . நஞ்சியாலா பற்றி நான் கேள்விப் பட்டதேயில்லை!
" நஞ்சியாலாவோ?, அதெங்கினை கிடக்கு?"
அப்ப அண்ணர்  தனக்கு அது இருக்கிற இடம் ஒரு போடிபோக்காய் தெரியுமாம், கூர் குறிப்பாய் இன்ன இடம் எண்டு சொல்லத் தெரியேல்லையாம் எண்டு சொன்னவர் . அது வானத்து வெள்ளிகளுக்கு அங்காலுப் பக்கம் இருக்குமாம். நஞ்சியாலாவைப் பற்றிச் சொல்லச் சொல்ல  உடனடியாவே அங்கினை  போவேணும் போலை கிடந்திச்சு.


"அங்கினை நஞ்சியாலாவிலை தான் தேவதைக் கதைகள், மாயாசாலக் கதைகள் எல்லாம் உருவாகிறதாம் எண்டு சொல்லுகினம்  தெரியுமே? அங்கினை போய்ச் சேர்ந்த  ஆக்களுக்கு  ஒருக்காலுமே அலுப்படிக்காதாம். வெள்ளாப்பிலை துவங்கினால், மைம்மல் வரை, ஏன் சாமத்திலை கூடி ஒரே கலகலப்பும் பைம்பலுந்தானாம். அப்பிடி எண்டால் பாரன் என்ரை சீனியப்பு! இஞ்சை கிடந்து ஒரிடமும் போகேலாமல், ஒருத்தரோடையும்  விளையாடவும் போகேலாமல்,நெஞ்சு நோக இருமியிருமி துப்பிக் கக்கி கொண்டு கிடக்கிறதை விட , நஞ்சியாலாவிலை நல்ல சுகமாய் இருக்கலாமெல்லே?"

அண்ணர்  என்னை எப்பவுமே "என்ரை சீனியப்பு" எண்டு தான் கூப்பிடுவார் . நான் சின்னப்பிள்ளையாய் இருந்த நாளில்  இருந்தே அப்பிடித்தான். அவர் அண்ணர்ப் பிள்ளைக்கு சீனியப்பம் எண்டாலும் நல்ல விருப்பம். ஒருக்கால்  நான் கேட்டநேரம் சொன்னவர் . சீனியப்பம் எண்டாலும் சரியான விருப்பமாம்,  அது போல்  என்னிலும்  நல்ல பட்சமாம். உது ஒரு அதிசயந்தான் வேறே என்ன    பின்னே? எலும்பும் தோலுமாய்,  பலவீனமாய்,   வயக்கெட்ட சதிரமும்,  பசுந்தில்லாமல்  வெளிறிய மூஞ்சையும், வளைஞ்ச   காலுமாய் ஒரு எல்லுப்போலை வடிவும் இல்லாத, பயந்தாங்கொள்ளியான  என்னில  போய் எப்பிடி பட்சம் வந்திருக்க முடியும்? நான் விடேல்லை  , அதையும் கேட்டுப்போட்டேன் .


"இப்பிடி என்ரை சீனியப்பு நீ ஒரு  பதுமையான, பெலயீனமான, வருத்தக்காறனான,பெடி எண்டு இருக்கிறபடியால்தான் என்ரை சீனியப்பு,என்ரை சீனியப்பு எண்டு என்னாலை பட்சமும்,பாசமும் காட்ட முடியும். இல்லையெண்டால் அது வேறை யாரோ எல்லோ? " 

அண்டிரவு  படுக்கிற நேரத்தில் அனக்கு  திரும்பவும் சாகிற பயம் தொட்டுவிட்டது. அப்ப அண்ணர் வந்து என்னைத் தடவி ஆறுதல் கதை சொன்னார் .


"நஞ்சியாலாவுக்கு நீ என்ரை சீனியப்பு  வந்தவுடனை  பிடிச்சிருக்கிற வருத்தம் எல்லாம் போய்  நல்ல குணமாய்  ஆகிடுவாய்.  நல்ல பெலசாலியா, எதுக்குமே பயப்படாத துணிஞ்ச கட்டையா, வடிவான பெடியனா வந்திடுவாய் என்ரை சீனியப்பு!"
"அண்ணர் உம்மைப் போலை நானும் வடிவா வருவனே?"
"என்னையும் விட இன்னும் நல்ல வடிவா என்ரை சீனியப்பு வருவன் ."
உவர் அண்ணர்ப்பிள்ளையார் அனக்கு உதை மட்டும் சொல்லி என்னைப் பேய்க்காட்டேலாது. ஏனெண்டால் பாருங்கோ, அவரைப்  போலை நல்ல இலச்சணமான, வடிவான ஒரு சீவனை அனக்கு நீங்கள் காட்டேலாது. அண்ணர்  வடிவெண்ட வடிவு. அந்தமாதிரி ஒரு வடிவெல்லோ? ஒருக்கா அம்மாவிட்டை தைக்க வந்த ஒரு ஆச்சி சொன்னா:
"சிக்றி! உம்மடை ஒரு பெடியைப் பார்க்க ஏதோ புராணக் கதைகளிலை வாற கதாநாயகன் மாதிரி நல்ல வடிவு. நல்ல குணம், சிரிச்ச முகம். இடைசுகம் நாவூறு கழிச்சுப் போடணை." 
அவ என்னைக் கருதிச் சொல்லேல்லை. அண்ணரைத் தான் நினைச்சுச் சொல்லியிருப்பா. அண்ணரைப் பாத்தால்  உண்மையிலை  புராணக் கதையிலை வாற ஒரு கதாநாயகன் மாதிரித்தான் இருக்கும். பொன்னிற தலைமயிர், வடிவான பளிச்சிடிற கடல் நீலக் கண் .  வகுப்பிலை படிப்பிலை எப்பவும் முதலாம் பிள்ளை. அண்ணர்  ஆக்களை நல்ல அணைப்பர் . எப்பவும் பைம்பலும் ,முசிப்பாத்தியுமாய் இருப்பார் . அதினாலை எங்கை போனாலும் ஒரு கூட்டம் அவரைச் சுத்திய  சீர்தான்.

அனக்குத்தான் அண்ணரோடை வெளியிலை போய் கூத்தடிக்க ஏலாமல் கிடக்கு. நாள்முழுக்க உந்தப் படுக்கையிலை கிடையனாய் கிடக்கிற பலன். ஆனா எப்பவும் தான் அடிச்ச கூத்து  பைம்பல் ,வாசிச்ச கதை, கேள்விப்பட்ட புதினம்  எல்லாம் வீட்டுக்கை வந்தவுடனை சொல்லுவார் . கேக்க  கேக்க    நல்ல ஆசையாய் இருக்கும். என்ரை படுக்கைக்குப் பக்கத்திலைதான் ஒவ்வரு நாளிரவும் ஒரு மடக்குக் கட்டிலை இழுத்துப் போட்டுப் படுப்பார் . எங்கடை வீடு ஒரு பழைய  மரவீடு. அதிலை மூண்டாம் தட்டிலை நாங்கள் குடியிருக்கிற  இடம். ஆகக் கூடி ஒரு அடுப்படியும், ஒரு சின்னக் கூடமும் மட்டுந்தான். அம்மாவின்ரை தையல் மிசின், ஒரு வாங்கு, நாலு கதிரை,ஒரு மேசை, ஒரு அலுமாரி இம்மளவும் கூடத்திலை இருக்கும். அந்த வாங்கிலை தான் அம்மா படுப்பா.அடுப்படிக்குள்ளை ஒரு மேசை ,ரெண்டு கதிரை, ஒரு அடுப்பு, தட்டுமுட்டுச்சாமான், நான் படுக்கிற வாங்கு இருக்கும் . அண்ணர் படுக்கிற மடக்குக் கட்டில் சிவர்ப் பக்கமா மடிச்சு பகல் நேரம் கிடக்கும்.




இரவிலை படுத்த படி கனநேரம் கதைப்பம் சிலநேரம் எங்கடை சளசளப்பு கூடிப் போச்செண்டால் கூடத்திலை படுத்திருக்கிற அம்மா ஆத்தேலாமல் ஒரு குரல் குடுப்பா.
"இண்டைக்குக் கதைச்சது காணும் என்ரை ஆசை மக்கள்! குட்டித்தம்பிக்கும் நித்திரை வேணும். பெரியதம்பியும் நாளைக்குப் பள்ளிக்கூடம் போக வேணுமெல்லோ?"

ஆனால் ஒழுங்கான நித்திரை எண்டது அனக்கு அருந்தல் தான். பாவம்! எள்ளோடை  கிடந்து காயிற எலிப்புழுக்கை  கணக்கிலை அண்ணர் பாடு. நான் இருமிற நேரமெல்லாம் நடுச்சாமம் எண்டாலும்   முழிச்சு சுடுதண்ணியிலை தேன் கலந்து தருவார் . அது குடிக்கக் கொஞ்சம் இருமல் அடங்கும்.

 அண்டைக்கு நான் சாகிறதை  நினைச்சுப் பயந்த இரவிலை என்ரை வாங்கிலை இருந்தபடி கனநேரமாய் நஞ்சியாலாவைப் பற்றி அம்மாக்குக் கேளாத படி மெதுவா சொல்லிக்கொண்டிருந்தார் . அம்மா கூடத்திலை தைச்சுக் கொண்டிருந்தா. நடுக்கதவு ஒருக்களிச்சுச் சாத்தி இருந்துது.  அவ வழக்கமாய் பாடுற பாட்டும் கேட்டது. அது சொந்த வீடு விட்டு,நாடு விட்டுக் கன தூரம் கடலிலை பயணம் போற மாலுமியைப் பற்றியது.  அந்தப் பாட்டு அனக்கு நல்ல ஞாபகம் இல்லை. ஒண்டிரண்டு வரி மட்டும் பாடம்.

"........ அலை நடுவே உன் நினைவுடன் என் உயிர் அடங்கும் நேரம்
           வெண்பனி வண்ணப் புறா ஒன்று பறக்கும் வெகு தூரம்
           அந்தப் புறா உன்னை நாடி உன் வாசல் வரும்.
           அலைகடலின்  காற்றும் என் உயிர் காவி வரும்.
          என்னன்பே! என்னுயிரின் இறுதி ஆசை ஒன்று
          உன்னுடன் ஒருசில கணமேனும் சேர்ந்திடக் கூடாதோ   இன்று?......"

ஒரு நல்ல பாட்டு. கவலையான  பாட்டு. ஆனா அண்ணர்  அதைக் கேட்டுச் சிரிச்சார் . 

" நினைச்சுப் பார் என்ரை சீனியப்பு! நஞ்சியாலாவிலை இருந்து நீ ......இப்பிடியொரு வெண்பனி வண்ணப் புறாவாய் வந்து......இந்த யன்னலோரத்திலை ........என்னைப் பாக்கவெண்டு வந்து........ பேந்து ஒரு நேரம் நல்ல பிள்ளை எல்லே? மறக்காமல் என்னட்டை  ஒருக்கா எண்டாலும் வந்திட்டுப் போ என்ரை சீனியப்பு என்ன?"
 நான் இருமத் துவங்கினன்.நான் கயிட்டப் படுற நேரத்திலை என்னை இடுக்கி  தன்ரை மடியிலை வைச்சு ஓலாட்டுவார்  . அப்பிடியே அப்பவும் என்னைத் தூக்கி வைச்சு ஓலாட்டிப் பாடினார் .
     "கடற்காற்றும் உம்  உயிர் காவிப் போகும் நேரம்,
      என் சீனியப்பு! 
     கடைசி பரிசாக என்னை காண நீரும்  வாரும்!"

முதலிலை நான் நினச்சது என்னெண்டால் அண்ணர்  இல்லாத நஞ்சியாலா எப்பிடி இருக்கும் எண்டதுதான். என்னதான் மாயாசாலக் கதைகளிலை வாறமாதிரி திவ்வியமாய் இருந்தாலும் அண்ணர்  மட்டும் இல்லாத இடத்திலை நான் தனிச்சுப் போடுவன். என்னத்தை செய்யிறது? எப்பிடி நடக்கிறது? எண்டு ஒரு குழப்பமா இருக்கும்.பயமாய் இருக்கும்.
 "அண்ணர்! அனக்கு அங்கினை போக விருப்பமில்லை." நான் அழுதன். "அண்ணர் நீர் இருக்கிற இடத்திலை தான் அனக்கும் இருக்க விருப்பம்"
 "ஓ ஒ! நானும் அங்கினை கொஞ்சக்  காலத்திலை வந்திடுவன் தானே? என்ரை சீனியப்பு!" 
 "கொஞ்சக் காலம் எண்டுறீர்! அது எம்மளவு காலம்? ஒரு தொண்ணூறு வரிய காலம்  அண்ணர் நீர் இஞ்சை இருக்க; நான் அம்மளவு வரியகாலமும் அங்கினை எப்பிடித் தனிய இருக்கிறது?"

நஞ்சியாலாவிலை இங்கத்தயில்  மாதிரிக் காலக் கணக்கு இல்லையாம். இங்கத்தயில்  தொண்ணூறு வரியம், அங்கினை ரெண்டு நாளைக்குச் சமமாம்; அண்ணர்  சொன்னவர் .
 "ஒரு ரெண்டு நாளைக்கு நான் இல்லாமல் தனிச்சு சமாளிக்க மாட்டியே என்ரை சீனியப்பு? பழ மரங்களிலை ஏறிப் பழம் பிடுங்கலாம் ... ஆத்திலை மீன் பிடிக்கலாம்...நீந்தி விளையாடலாம்... விறகுகளைக்  குமிச்சு  நெருப்புக்  மூட்டி குளிர் காயலாம்... வண்ணாத்திப் பூச்சி, அணில்குஞ்சு , மயில் எல்லாம் பிடிச்சு வளக்கலாம்.. உதெல்லாம் என்ரை சீனியப்பு செய்து முடிக்க முன்னம் நான் பறந்தோடி வந்திடுவன் எல்லோ? அப்ப நீ கேப்பாய்: 'எட அண்ணர் அதுக்குள்ளே கெதியா வந்திட்டீர்!?'  எண்டு "

ஒரு ரெண்டு நாள் எண்டால் சமாளிச்சு போடலாம் எண்டு நினச்சு அழுகிறதை நிற்பாட்டினன். 
 " ஆனா அண்ணர் நீர் அனக்கு முதலே நஞ்சியாலாவுக்கு வந்து.. அனக்காக காத்துக் கொண்டிருந்து... மீன் பிடிச்சு கொண்டிருந்தால்... எவ்வளவு நல்லாயிருக்கும் இல்லையே?" 
அப்ப அண்ணர் என்னை கட்டிப் பிடிச்சு தன்னுடைய பாசம் வழியிற கண்ணாலை என்னைக் கன நேரம் பாத்தார். அவரின்ரை முகத்தில துக்கம் இருந்துது.
" என்ன செய்யிறது என்ரை சீனியப்புவை விட்டுப்பிறிஞ்சு தொண்ணூறு வரியகாலம் இங்கினை தனிச்சு இருக்கிற பலன் அனக்கு.!" குரலிலையும் துக்கம் தெரிஞ்சிது. நாங்கள் இரண்டு பேருமே அந்தத் தொண்ணூறு வரியகாலப் பிறிவை  நம்பியிருந்தம்.
                                                                
                                               
                                                 படம்: இலோன் வீக்லாண்ட்(Ilon Wikland)


                                                                (வளரும்)

சொல்விளக்கம்:

அனக்கு - எனக்கு 

அவளவை = அவள்+ அவை >அவள்+அவர்கள் >அந்தப்பெண்கள் 
கள்ளடியாக = பொய்யாக 
அசுகை -சத்தம் 
புறியமில்லை <பிரியமில்லை -விருப்பமில்லை 
சுவாத்தியம் -இன்பம் 
பேய்க்கதை- பொய்க்கதை 
போடிபோக்காக - ஒரு குறிப்பாக 
கூர் குறிப்பாக - உறுதியாக 
வெள்ளாப்பு - அதிகாலை 
மைம்மல் < மைமல் - மாலைநேரம் 
பைம்பல் < பம்பல் -மகிழ்ச்சி 
வயக்கேடு -மெலிவு 
பசுந்து - பொலிவு 
பட்சம், பாசம் -அன்பு 
எல்லுப்போலை <எள்ளுப்போலை <எள்ளளவு 
பதுமையான -அமைதியான 
பேய்க்காட்டுவது -ஏமாற்றுவது 
பெடி - மகன் 
அணைப்பர் -சேர்த்துக் கொள்ளுவார் 
கிடையனாக கிடத்தல் - படுக்கையில் நோய்ப் பட்டுக் கிடத்தல் 
கூத்தடித்தல் -மகிழ்ச்சியுடன் விளையாடுதல், குறும்பு செய்தல் 
சலம் - மூத்திரம் 
அருந்தல் - அருமை 
கயிட்டம் -துன்பம் 
இடுக்குதல்- தூக்குதல் 
ஓலாட்டுதல் ,ஓராட்டுதல் - தாலாட்டுதல்  
அங்கினை - அவ்விடம் 
இங்கத்தயில் <இங்குத்தயில் < இங்குற்றயில் < இங்கு+உற்ற+இல் =இங்குற்ற விதத்தில் 
திவ்வியம் - மேன்மையானது 
வரியம் -வருடம் 
குமிச்சு -குவித்து 
பிறிவு  -பிரிவு 

பேச்சு வழக்கில் ;

மூன்று  கால தன்மை ஒருமை வினைமுற்றுக்களிலும்  அன் விகுதியும். பன்மை வினைமுற்றுக்களில் அம்  விகுதியும்  வரும்.
எடுத்துக்காட்டு: நான் - வந்தன் 
                             - வருகிறன் ,வாறன் 
                             - வருவன் 
                  நாங்கள் - வந்தம் 
                            - வருகிறம் , வாறம் 
                            - வருவம் 
எதிர்கால படர்க்கை  வினைமுற்றுக்களில்  அன்,அள் ,அர்  விகுதிகள் வரும்.
எடுத்துக்காட்டு:  அவர் வருவர்.
                      அவன் வருவன் 
                      அவள் வருவள் 

Kommentarer