மூலக்கதை : Bröderna Lejonhjärta
எழுத்தாளர் : அஸ்த்ரி லிண்ட்கிறேன் , சுவீடன்
(ASTRID LINDGREN , SWEEDEN)
(14/11-1907 --- 22/01-2002)
துடிப்பு 2 :நஞ்சியாலா !
ஆ! கடவுளே! இப்பிடி ஒரு கேடுகாலம் வந்து சேர்ந்திட்டுதே! என்ரை நெஞ்சு வெடிக்குமாப் போலை நோகுது. உந்தக் கோதாரியிலை போற இருமலின்ரை உபத்திரவம் கூட இப்ப தாங்கலாம் போலை கிடக்கு. வேண்டாம், வேண்டாம் எண்டு ஓடி ஒழிச்சாலும் விடாமல் துரத்திக் கொண்டு வாற நினைவுகளுக்கு தப்பி, எங்கினை மனுசராப் பிறந்தவை ஒளிக்கிறது?
![]() |
ஓவியர் : சியோவன்னி பிறகொலின் , இத்தாலியா Giovnni Bragolin (1911-1981) |
ஐயோ! இந்த அண்ணர் இப்பவும் இரவு நேரங்களிலை என்னோடை இருந்து ஏதாவது புதினங்களைப் பறைஞ்சு கொண்டிருந்தால் எம்மளவு நல்லது!........ அண்ணர் தன்ரை பாட்டிலை பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டு
இருந்திருக்கலாம்!.......தெருவிலை மற்றப் பிள்ளையளோடை பம்பல் அடிச்சுக் கொண்டு இருந்திருக்கலாம் !.....ஆ! அநியாயப் பட்ட கடவுளே! எதுக்கும் பலனில்லாமல் போச்சுதே!
என்ரை பாசமான அண்ணர் யோனத்தான் இப்ப நஞ்சியாலாவிலை !
என்னை எப்பவும் "என்ரை சீனியப்பு!" எண்டு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுக்குச் சொல்லு பட்சமாய் கூப்பிடிற, என்ரை அன்பான, ஆசையான, அண்ணர் யோனத்தான் என்னை இஞ்சை தனிய விட்டிட்டு நஞ்சியாலாவுக்கு என்னை முந்திக் கொண்டு போவிட்டார். நானும் அதைத்தான் முதலிலை விரும்பின நான். எண்டாலும் அண்ணரை பிரிஞ்சு சீவிக்கிறது எண்டது பெரிய கொடுமையாய்,தாங்கேலாத துன்பமாய் தவிப்பாய் கிடக்கு. ரெண்டு பெரும் சேர்ந்து போயிருந்தால் எம்மளவு நல்லாயிருந்திருக்கும்?
ஐயோ! அனக்கு விசர் பிடிக்குமாப் போலை கிடக்கு! என்ன நடந்தது எண்டதை நினைச்சுப் பாக்கவே வயித்துக்கை என்னவோ செய்யிது. சத்தி வருமாப் போலை இருக்குது. தலை "விண்,விண்" எண்டு தெறிக்கிது .செய்தித்தாளிலை இப்பிடி எழுதிக் கிடக்கு. தயவு செய்து கொஞ்சம் நீங்களே வாசிச்சுப் பாருங்கோ.
" நேற்று மாலை நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தொன்று ஒரு உயிரையும் பலி கொண்டது! பந்தக்கால் தெருவிலே இருந்த நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த, நான்கு தட்டுக்களைக் கொண்ட மரவீடோன்று தீப்பிடித்து அடி அத்திவாரத்துடன் சாம்பலானது. மாலை ஆறு மணியளவில் பரவிய தீயில் மூன்றாம் தட்டில் இருந்த ஒரு குடியிருப்பில் ஒன்பது வயதுடைய , நோயுற்றுப் படுக்கையில் கிடந்த சிறுவனான . கார்ல் சிங்கம் அகப்பட்டுக் கொண்டார். சற்று நேரத்தில் அவ்விடம் விரைந்து வந்த அண்ணனான பதின்மூன்றே வயதான யோனத்தான் சிங்கம் , நோய்ப்படுக்கையில் இருந்த தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காக ; மற்றவர்கள் யாரும் தடுக்குமுன்னே எரியும் கட்டடத்தினுள் பாய்ந்தார். ஒருசில நொடிகளில் படிகள் பகுதி முழுவதுமே தீக்கடல் ஆனது. வேறு வழியின்றித் தன் தம்பியை முதுகில் காவியபடி தீக்கொழுந்துகள் பின்னாலே துரத்த யன்னலிலிருந்து கீழே குதித்தார். கீழே விழுந்த வேகத்தில் ஏற்பட்ட காயங்களால் சற்று நேரத்தில் அவருயிர் பிரிந்தது. ஆனால் நோயாளியான அவரது இளைய சகோதரர் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினார். ஒரு தையற் தொழிலாளியான தாயார் அந்நேரம் வாடிக்கையாளரிடம் சென்றிருந்தார். வீடு திரும்பிய அவருக்கு இடி போலுஞ் செய்தி தான் காத்திருந்தது. தீவிபத்தின் காரணம் அறியப் படவில்லை."
மைக்க நாள் வந்த செய்தித்தாளிலையும் அண்ணரைப் பற்றிக் கிடந்தது. அவரின்ரை வகுப்பாசிரியை இரங்கலுரை எழுதி இருந்தா. அது இப்பிடி இருந்துது:
"அன்பாலே எங்கள் நெஞ்சம் கவர்ந்த யோனத்தான் சிங்கம்!,
உண்மையில் உன் பெயர் யோனத்தான் சிங்கநெஞ்சன் என அமைந்திருக்க வேண்டும். உனக்கு ஞாபகம் இருக்கிறதோ? தீரம் மிக்க றிச்சார்ட் சிங்கநெஞ்சன் என்ற ஒரு ஆங்கில அரசனைப் பற்றிச் சரித்திரப் பாடத்தில் படித்தோம், இல்லையோ? அப்போது நீ கூறினாய் : <எதிர்காலத்தில் வரவிருக்கும் சரித்திரப் பாடங்களில் குறிப்பிடுமளவுக்கு துணிச்சலுடன் வீரத்துடன் என்னால் நடந்திட முடியாது.> என்று. அன்புள்ள யோனத்தான் நீ சரித்திரப் பாடங்களில் இடம் பெறா விட்டாலும், உரியதொரு தருணத்தில் நீசெய்த வீரச் செயல் உன்னை ஒரு தீரம் மிக்க மனிதன் ஆக்கி விட்டது. தியாக தீபமாகி விட்ட உன்னை உன் ஆசிரியையான என்னால் எக்காலமும் மறந்திட முடியாது. உன் சக மாணவத் தோழர்களும் மறந்திட மாட்டார். எங்களுடன் பங்கிட்ட உனது தருணங்களுக்காக என்றென்றும் எமது நன்றிகள் உனக்கே உரித்தானவை . உன் கலகலப்பு இன்றிப் பாடசாலை வளாகமே வெறிச்சோடியுள்ளது . வகுப்பறை வெறுமையாக இருக்கிறது. அழகு மிக்க, அன்பு மிக்க எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட யோனத்தான்!, என்ன செய்வது? கடவுளர்களால் காதலிக்கப் படுபவர்கள் இளவயதில் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப் படுகின்றனரே!? எங்கள் அன்பான யோனத்தான் சிங்கநெஞ்சன்! அமைதியாக தூங்கு ! நின் நினைவுகள் எம் நெஞ்சங்களை விட்டு என்றும் அகலா.
உன்னை மகிழ்வுடன் என்றும் நினைவு கூரும் ஆசிரியை
கிறேத்தா அண்டெர்ஸ்சொன் "
உன்னை மகிழ்வுடன் என்றும் நினைவு கூரும் ஆசிரியை
கிறேத்தா அண்டெர்ஸ்சொன் "
அந்த வகுப்பாசிரியை சரியான செட்டுப் பிடிச்சவ. எண்டாலும் அவகூடி அண்ணரிலை நல்ல பட்சம் வைச்சிருக்கிறா. ஆர் தான் அண்ணரிலை அன்பில்லாதவை? அண்ணரைப் பற்றி அறிஞ்ச சகல பேருமே அண்ணரிலை நல்ல அபிப்பிராயம் வைச்சிருந்தவை. வகுப்பாசிரியை சிங்கநெஞ்சன் எண்ட பேரைத் தேடி வைச்சது நல்ல பொருத்தம் தான் இல்லையே?
ஊர் முழுக்க அறிஞ்சவை, தெரிஞ்சவை, கூடிப் புழங்கினவை, எல்லாம் அழுதிச்சினம். ஏன் கனக்க? அண்ணரைப் பற்றிக் கேள்விப்பட்ட சனம் கூட இரக்கப் பட்டதுகள்.
"ஐயோ! அந்த அருமந்த ஆம்பிளைப் பிள்ளை தப்பி, உந்த வருத்தக்காறப் பெடி கிடந்து உத்தரிக்காமல் போய்ச் சேர்ந்திருக்கலாமே! கண் கெட்ட கடவுள்!"எண்டு சனங்கள் கதைக்கிறது அனக்குக் கேக்காவிட்டாலும், ஒண்டும் விளங்காமலில்லை. அம்மாவைத் தேடி வாற பொம்பிளையள் அவவைப் பாத்து
"என்ன கறுமமோ உமக்கெண்டு இப்பிடி ஒரு இடியேறு விழுந்திட்டுதே,சிக்றி! கட்டின பிரியனும் போன இடம் தெரியேல்லை . கையுதவியான பிள்ளை யோனத்தானும் போய்ச் சேர்ந்திட்டான் புண்ணியவான்." எண்டு சொல்லுவினம்.
எரிஞ்சு போன எங்கடை பழைய வீட்டுக்குப் பக்கத்திலை இருக்கிற இன்னொரு வீட்டிலை இப்ப இருக்கிறம். முந்தினது மாதிரியே அச்சொட்டாக அதே மாதிரிக் குடியிருப்புத் தான் .எங்கடை குடியிருப்பு இங்கை முதலாம் தட்டிலை இருக்கு. சிலபேர் பாவிச்ச தளபாடங்களை தந்து உதவிச்சினம். அம்மாவிட்டை தைக்க வாற பொம்பிளையளும் உதவி செய்தவை. முன்னை நான் படுத்த அதே மாதிரி ஒரு வாங்கும் கிடைச்சது. கிட்டதட்ட எல்லாமே முந்தின குடியிருப்பிலை இருந்த மாதிரியே அமைஞ்சிருக்கு. ஆனால் அண்ணர் மட்டும் இல்லையே!
இரவுகளிலை பக்கத்திலை இருந்து "என்ரை சீனியப்பு!" எண்டு அன்பாகக் கதை பறையிற அண்ணர் இப்ப அனக்குப் பக்கத்திலை இல்லை. இரவிலை தனியக் கிடக்கேக்கை நெஞ்சு நோகுது. அண்ணர் சாகிற நேரத்திலை சொன்னதுகளை அனக்கு நானே கிசுகிசுக்கிறன். நாங்கள் மூண்டாம் தட்டிலை இருந்து குதிச்சு கீழை விழுந்த நேரத்திலை மூஞ்சை அடிபட அண்ணர் விழுந்தவர். ஆரோ ஓடி வந்து அவரை திருப்பிப் போட்டிச்சினம். அப்பத்தான் அவற்ரை முகத்தைப் பாத்தன். ஒரு கடைவாய்ப் பக்கம் இரத்தம் வடிஞ்சது. அவராலை கதைக்க முடியாமல் இருந்துது. அப்பிடி இருந்தும் ஒரு புன்சிரிப்போடை ஒண்டிரண்டு வார்த்தை சொன்னார்.
"அழாதை என்ரை சீனியப்பு! நஞ்சியாலாவிலை சந்திப்பம்!"
அதுக்கு மேலை ஒண்டும் சொல்லேலாமல் கண்ணை மூடிட்டார். ஆரோ அவரைத் தூக்கிப் போச்சினம். பேந்து நான் அண்ணரை பாக்கவேயில்லை.
உந்த நடப்பு எதையும் துவக்கத்திலை நினைக்கவே நடுக்கமாய் இருந்துது. இப்பிடி ஒரு கெட்டது நடந்ததை, நெஞ்சை நோக வைக்கிற நடப்பை எப்பிடி மறக்கிறது? அண்ணரைப் பற்றி நினைக்க நினைக்க தலை வெடிக்குமாப் போலை கிடக்கு. அவரை பிரிஞ்ச ஏக்கம் தாங்க ஏலாமல் கிடக்கு. பயமாய் கிடக்கு. ஒருவேளை நஞ்சியாலா எண்டதெல்லாம் பொய் எண்டால்.... என்னைச் சமாதானப் படுத்துறதுக்காக முசுப்பாத்தியா அண்ணர் கதை விட்டிருப்பாரோ? .... நான் நல்லா அழுதன்.
ஆனால்..... நம்ப முடியாததெல்லோ நடந்திது!அண்ணர் என்னைத் தேடி வந்தார்!. ஆறுதல் சொல்ல வந்தார்! அண்ணர் நஞ்சியாலாவுக்குக்குத்தான் போய் இருந்திருக்கிறார் . நஞ்சியாலாவிலை நிண்ட நேரம், தான் இல்லாமல் நான் இங்கினை எப்பிடித் தவிச்சுப் போவன் எண்டு நினைச்சிருக்கிறார். உடனை பறந்து வந்திட்டார்.
அது ஒரு மைம்மல் பொழுது. அம்மா பாவம்! தைச்ச உடுப்பைக் கொண்டு எங்கினையோ போட்டா.நான் தனிய இருக்கிறன். அண்ணரை நினச்சு ஏங்கி ஏங்கி துக்கத்திலை தவிச்சுப் போய் அழுகிறன். அடுப்படி யன்னல் திறந்து கிடக்குது . கொஞ்சம் சூடான வசந்த காலக் காத்து யன்னலுக்குள்ளாலை வந்து இதமா தடவுது. திடீரெண்டு கொஞ்சம் புறாக்களின்ரை "குர்று குறு! குர்று குறு!" எண்ட சத்தம் கேக்குது. பாத்தா அங்கினை பின்னாலை முற்றத்திலை வழக்கமாய் வந்து இரை தேடுற புறாக்கள் தான்.
அப்பத்தான் அது நடந்திது!
நான் கவிண்டு படுத்தபடி தலைகணிக்குள்ளை முகத்தை புதைச்ச படி அழுகிறன். அப்ப அனக்கு அருகாலை ஒரு ஒற்றை "குர்று! குறு!" சத்தம் கேக்கிது. நான் மெல்ல தலையை நிமித்திப் பாக்கிறன்.அடுப்படி யன்னல் நிலையிலை ஒரு புறா! ஒரு வெண்பனி வண்ணப் புறா! வழக்கமாய் உலாவிற சாம்பல்நிறப் புறாக்களிலை ஒண்டு இல்லை உது. நான் எப்பிடி அதை அடையாளம் பிடிச்சன் எண்டு மற்றவை ஆருக்கும் விளங்காது. சரி கணக்கா அம்மா பாடிற அந்த கப்பல்காறன் பாட்டிலை வாற மாதிரியே தான்......
அண்ணர் பக்கத்திலை வந்து பாடுற மாதிரிக் கிடக்கு. அது அனக்குக் கேக்கிது. நான் என்னென்னவோ சொல்ல விரும்பினன். ஆனால் ஏலாமல் போச்சு. நான் படுத்துக் கிடந்த படியே புறாக்களின்ரை குறு குறுப்புச் சத்தத்தைக் கேக்கிறன். அல்லது எப்பிடிச் சொல்லிறதெண்டால் .... அண்ணற்றை குரலை நான் கேட்டன். சொல்லப்போனால் அடுப்படி அறை முழுக்க ஒரு கிசுகிசுக்கிற சத்தம்.
உதைக் கேக்கிற ஆரும் ஏதோ ஆவி,பேய்,பசாசு எண்டு நினச்சு நான் பயந்திருப்பன் எண்டு நினைப்பினம் தான். ஆனா நான் பயப்பிடவேயில்லை . ஏன் பயப்பிடவேணும்? உசிரோடை இந்தப் பூமியிலை இருந்த நேரமெல்லாம் அன்பாய், ஆசையாய் புழங்கின என்ரை அண்ணர் ; இப்ப ஆவியா, அல்லது புறாவாய் வந்து என்ன தின்மையைச் செய்யப் போறார்? வந்தவர் என்னைக் கூட்டிப் போனால் அனக்குக் கொண்டாட்டம் எல்லோ? அனக்கு வந்த புளுகத்துக்கு கூரை முட்டத் தொங்கிக் குதிக்க வேணும் போலை கிடந்திது. என்ரை காதிலை வந்து விழுந்ததெல்லாம் நல்ல சுகமான பாட்டாய் இருந்திது.
ஓவியர் : இலூன் வீக்கெலாண்ட் Ilon Wikeland பிறந்த நாடு : 1930 , எஸ்தோனியா வாழும் நாடு: சுவீடன் |
ஓ ! எல்லாமே மெய்தான்! நஞ்சியாலாவை பற்றியது எல்லாமே மெய்மெய்யாத் தான் இருக்க வேணும்! அண்ணர் என்னையும் கெதியா நஞ்சியாலாவுக்குக் கூட்டிப் போக வந்தவராம்; அங்கினை போய்ச் சேருறதுதானாம் எல்லா வழியிலும் அனக்கு நல்லதாம் எண்டு இப்பிடிச் சொன்னவர்.
யோசிச்சுப் பாருங்கோ! அவருக்கு எண்டு அங்கினை ஒரு சொந்த வீடு இருக்காம். ஒரு வடிவான பழைய வீடாம்; வீடிருக்கிற வளவுக்குப் பேர் குதிரைக்காறன் வளவாம், ஊருக்குப் பேர் செர்ரிப்பழப் பள்ளமாம் . கேக்க நல்லாயிருக்கு, இல்லையே? யோசிச்சுப் பாருங்கோ! குதிரைக்காறன் வளவுக்குப் போன போக்கிலை முதல் முதலாய் கண்ணிலை படிறது என்னெண்டால், ஒரு பச்சை நிறப் பெயர்ப்பலகையாம் ! வெளிப் படலையிலை ஆணியடிச்சுப் பொருத்தியிருக்குதாம் . அச்சுப் போலை வெள்ளை நிறத்திலை வடிவான எழுத்துக்களிலை "சிங்கநெஞ்சன் சகோதரர்கள்" எண்டிருக்காம்.
"ஏனெண்டால் நாங்கள் ரெண்டு பேரும் இனி அங்கை தான் குடியிருக்கப் போறம் என்ரை சீனியப்பு!" எண்டார் அண்ணர் .
யோசிச்சுப் பாருங்கோவன்! அனக்கும் நஞ்சியாலாவுக்குப் போனவுடனை, சிங்கநெஞ்சன் எண்ட பேர் வந்திடும் எல்லே! அனக்கு அது நல்ல விருப்பந்தான். நல்ல புளுகமும் தான். பின்னை! அண்ணரைப் போலை குடும்பப் பேர் இருக்கும்! , அவரளவுக்கு நான் தைரியசாலியாய் இல்லாட்டாலும்.
" என்னட்டை கெதியாப் பறந்து வா என்ரை சீனியப்பு! நீ அண்ணரட்டை எண்டு வரேக்கை என்னை அங்கை குதிரைக்காறன் வளவிலை வீட்டிலை காணேல்லை எண்டு கண்டால், ஒண்டுக்கும் யோசிக்காமல் மளமளவெண்டு கீழை ஆத்தங்கரைப் பக்கமாய் ஓடி வா. அங்கை நான் மீன் பிடிச்சுக் கொண்டிருப்பன் . என்ன என்ரை சீனியப்பு?"
கொஞ்சத்திலை சத்தஞ்சலார் எல்லாம் அடங்கி அமைதியாப் போச்சு, வெண்பனி வண்ணப் புறாவும் நஞ்சியாலாவுக்குத் திரும்பிப் பறந்து போவிட்டிது.
நான் இஞ்சை என்ரை வாங்கிலை இருந்து கொண்டு எப்படா அண்ணரின்ரை வழியிலை பறந்து போகலாம் எண்டு காத்துக் கொண்டிருக்கிறன் . பாதை பிடிக்கிறது ஒண்டும் பெரிய கயிட்டமாய் இராது எண்டு நினைக்கிறன். அண்ணரும் சொன்னவர் அதொண்டும் பெரிய பாடு இல்லையெண்டு. எண்டாலும் ஒரு கைகாவலுக்கு முகவரியை ஒரு துண்டிலை எழுதி வைச்சிருக்கிறன்:
"சிங்கநெஞ்சன் சகோதரர்கள்
குதிரைக்காரன் வளவு
செர்ரிப்பழப் பள்ளம்
நஞ்சியாலா "
அண்ணர் அங்கினை நஞ்சியாலாவிலை போய் இருக்க வெளிக்கிட்டு இண்டையோடை கிட்டத்தட்ட இங்கத்தையில் ரெண்டு மாசகாலம் ஆகிவிட்டிது. இந்த கொடுமையான , நீண்ட ரெண்டு மாசகாலப் பொழுதிலை அண்ணரை விட்டுப் பிறிஞ்சு நான் தனிச்சிருந்து வதை பட்டது ஏழேழு சென்மத்துக்கும் காணும். எந்த ஒரு மனிசருக்கும் இந்த நிலை வந்திடக் கூடாது. ஆனால் நானும் வலு கெதியிலை நஞ்சியாலாவுக்குப் பறந்து போகப் போறன் எண்டது ஒரு பெரிய ஆறுதல் !
ஒரு சங்கதி ஞாபகத்துக்கு வரச்சிரிப்பு வருது. மேல்தட்டிலை இருக்கிற ஆச்சி, தன்ரை பேரப்பெடியனின்ரை குழப்படி தாங்கேலாமல் போற நேரம் " எட பறப்பானே!" எண்டு ஏசுவா. அப்ப அவன் பறக்குமாப் போலை மனசிலை ஒரு படம் விழும். என்னை ஆரும் அப்பிடி ஏசவில்லை. ஆனால் நான் பறக்கப் போறன். சிலநேரம் இண்டிரவே பறக்கிற பலன் வரக்கூடும். நான் ஒரு துண்டெழுதி அடுப்படி மேசையிலை அம்மான்ரை கண்ணிலை படத் தக்கதாய் வைக்கவேணும். நாளைக்குக் காலமை அம்மா அதைப் பாக்க வேணும்.
அந்தத் துண்டிலை இப்பிடி எழுதிவைக்க வேணும் :
அன்புள்ள அம்மாவுக்கு,
அழ வேண்டாம்.
நாங்கள் நஞ்சியாலாவில் திரும்பவும் சந்திப்போம் !
![]() |
ஓவியர் : எட்வார்ட் முங்க் ,நோர்வே Edvaard Munch (1863- 1964) |
சொல்விளக்கம் :
பைம்பல்<பம்பல் - களிப்பு,மகிழ்ச்சி
விசர் - பைத்தியம்
வயித்துக்கை - வயிற்றுக்குள்ளே
சத்தி-வாந்தி
மைக்க நாள்- மறுநாள்
செட்டு ,நடப்பு - தற்பெருமை
புழங்கினவை < புழங்கினவர்கள் -பழகினவர்கள்
இடியேறு - இடி போன்ற துன்பம்
கறுமம்-தீவினை
பிரியன்- புருசன் ,கணவன்
பாவிச்ச - உபயோகித்த
மூஞ்சை-முகம்
பேந்து<பெயர்ந்து,பின்பு
முசுப்பாத்தி<முசிப்பாற்றி =முசிப்பு+ஆற்றி-களைப்பு +ஆற்றி- பரிகாசம்
மைம்மல்<மைமல்- மாலைநேரம்
சத்தஞ்சலார் - சத்தம்
கயிட்டம்- கஷ்டம்
கைகாவலுக்கு-ஞாபகத்துக்கு
தின்மை - தீமை
தொங்கிக்குதித்தல் - துள்ளிக் குதித்தல்
பெரிய பாடு - பெரிய சிரமம்
வதை - துன்பம்
கைகாவல் - பாதுகாப்பு
Kommentarer
Legg inn en kommentar