மறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்!
மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.௧
ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ராசா, ராசாத்தி, மந்திரி,சேவகன், கள்ளன் என்று அந்தக் கடுதாசித் துண்டுகளிலே தனித்தனியே எழுதிச் சுருட்டி குலுக்கிப் போடவேணும். ஆளுக்கொரு துண்டை எடுத்து அவரவர் தனக்குக் கிடைத்த பாத்திரத்தை மற்றவருக்குக் காட்டாமல் இருக்க வேண்டும்.
அரசனாகப்பட்டவர் ஆரம்பிப்பார்.
ராசா: ஆரடியம்மா ராசாத்தி?
(அதுவரை ராசாத்தி ஆரெண்டு ராசாவுக்கே தெரியாது)
ராசாத்தி: நான்தானய்யா ராசாவே!
ராசா: உன்வீட்டில் நடந்த சங்கதியென்ன?
ராசாத்தி: கள்ளன் வந்து களவெடுத்தான்!
ராசா: கள்ளனைச் சீக்கிரங் காட்டு!
இப்போது ராசாத்தி கள்ளன் இன்னார் என்று சரியாக காட்டவேணும்.
அப்படி சரியாக காட்டினால்....
ராசா: ஆரிங்கே மந்திரி?
மந்திரி: நான்தானையா ராசாவே!
ராசா: சேவகனை கூப்பிட்டு கள்ளனுக்கு தண்டனை குடுக்கவும்!
மந்திரி: சேவகனே கள்ளனுக்கு தண்டனை குடு!
சேவகனுக்கு முன்னே கள்ளன் தன்னிரு கைகளையும் சேர்த்து நீட்ட வேண்டும்.
சேவகனும் தன் கையைப் பக்கப்பாட்டாலே பின்வாங்கி கள்ளனின் கைகளைப் பலமாக அடிக்கப் பார்க்க வேண்டும். அடிக்க வரும் கை, தன் கைகளின் மேல் படும்முன்னே கள்ளன் தந்திரமாகத் தூக்கிவிட்டால் தண்டனை தொடராது.
தப்பித்தவறி ராசாத்தி பிழையான ஆளைக் கள்ளனெனக் காட்டினால்...
ராசா: ஆரிங்கு மந்திரி?
மந்திரி: நான்தானையா ராசாவே!
ராசா: சேவகனைக் கூப்பிட்டு குற்றமற்றவர் மேல் பழிபோட்ட ராசாத்திக்கு தண்டனை குடு!
அதன் பிறகு ராசாத்தியும் அறை வாங்க வேண்டியதுதான். கெட்டித்தனமிருந்தால் கனக்க அடி வாங்காமல் தப்பலாம்.
தண்டனை முடிய அடுத்த சுற்று தொடரும்.

௨
1. கடுதாசிமட்டையை எடுத்து ஒரேயளவிலே வெட்டி சீட்டுக்கட்டுப் போல செய்ய வேணும்.
25-30-35-40 எண்டு வசதிப்பட்ட தொகை சீட்டை எடுக்கவும்.
2. அய்வஞ்சு சீட்டுக்களாய் எடுத்து நாய், பூனை, காகம், மயில் என்று பறவை, மிருகங்களின் பேரை எழுத வேணும்.
3. அஞ்சு பேர் வட்டமாக இருந்து விளையாட வேணும். அஞ்சு வகையான விலங்குகளினதும் பேருள்ள 25 பேர்த்துண்டுகளையும் சீட்டுக்கட்டுப் போல கலந்து அஞ்சு பேருக்கும் பிரித்துக் கொடுக்க வேணும்.
4. அவரவர் தனக்கு கிடைத்த துண்டுகளைப் பிறருக்கு காட்டாமல் வைத்துக் கொள்ள வேணும்.
5. ஆராவது ஒருத்தர் தன்னுடைய ஒரு சீட்டுத்துண்டை பக்கத்திலுள்ள ஆளுக்கு கொடுத்து ஆரம்பிக்க வேணும்.
6. அப்படியே இரண்டாமவர் தனக்கு அவசியமில்லாத துண்டை மூன்றாமாளுக்குத் தரவேணும்.
இப்படியே விளையாட்டு போய்க்கொண்டிருக்கும்போது ஆருக்கு முதலில் அஞ்சும் ஒரேபேருள்ள பறவை அல்லது மிருகம் வருகின்றதோ அவர் வென்று விலக மற்றவர்கள் தொடர்ந்து கடைசியில் ஒருவர் தனக்கு அஞ்சும் ஒரே மாதிரியான விலங்கு வராமல் தோற்கும்வரை விளையாடலாம்.
7. ஆட்டம் திரும்பத் தொடரும்.

௩
இது ஒருவித ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டு
ஒரு மூன்றுநாலு பேர் காணும். ஒருவர் மீனைக் கருவாடாக்கும் முதலாளி. மற்றவர்கள் கருவாட்டுக்குக் காவல் காப்பவர்கள். முதலாளி வெளியே போகுமுன் கருவாடுகளை எண்ணிப் பார்ப்பார். கருவாடுகளாக எண்ணப்படுவன, மற்றவர்களின் கைகால்கள் ஆகும். கால்களை நீட்டி கைகளால் தொட்டபடி இருக்க முதலாளி எண்ணிப் பார்த்து கவனம் சொல்லி விட்டு வெளியே போவார். காவலிருப்பவர்கள் முதலாளி இல்லாத வேளைபார்த்து துள்ளிக் குதிப்பார்கள். முதலாளி வரும் அசுகை கண்டதும் ஓடிப்போய் தத்தம் இடங்களில் ஒற்றைக்காலை மடக்கி அதே பக்கக் கையைப் பின்னுக்கு மறைத்து நல்லபிள்ளைக்கு இருப்பார்கள். முதலாளி வந்து கருவாட்டை எண்ணிப் பார்ப்பார். குறைந்திருக்கும்.
முதலாளி: கருவாடெங்கை கருவாடு?
மற்றவர்கள்: காகம் கொண்டு போட்டுது.
முதலாளி: காகமெங்கை?
தெங்கிலை.
தெங்கெங்கை?
தறிச்சாச்சு.
தறிச்ச குத்தி எங்கை?
எரிச்சாச்சு.
எரிச்ச சாம்பல். எங்கை?
கலம் பூசியாச்சு.
கலம் எங்கை?
வித்தாச்சு.
வித்த பணம் எங்கை?
இதோ உமக்கு ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி எல்லாவகை இறைச்சியும் வாங்கிச்
சமைச்சு வைச்சு அடுப்படியையும் பூட்டி வைச்சிருக்கு. பூட்டைத்திறந்து
போய்ச்சாப்பிடும்.
என்று சொல்லித் திறப்பாக ஒரு குச்சியைக் கொடுப்பார்கள். முதலாளியும் அப்படி ஒரு அடுப்படி அறை இருப்பதாகப் பாவனை காட்டி அதைத் திறந்து உள்ளே போக மற்றவர்கள் ஓடி மறைவிடந்தேடி ஒளிப்பார்கள். ஒளித்தவர்களைப் பிடித்தது வந்து முடிந்ததும் கடைசியாகப் பிடிபட்டவர் முதலாளியாக விளையாட்டுத் தொடரும்.
௪
இது ஒரு கேள்வி வதில் விளையாட்டு. இருவர் மட்டும் போதும்.
என்ன?
அன்னம்!
என்ன அன்னம்?
அரிசிப்புட்டு.
என்ன அரிசி?
வெள்ளை அரிசி.
எந்த வெள்ளை?
பால் வெள்ளை.
என்ன பால்?
பசுப்பால்.
எந்தப்பசு?
கறுத்தப்பசு.
எந்தக் கறுப்பு?
காகக் கறுப்பு.
எந்தக் காகம்?
அண்டங் காகம்.
எந்த அண்டா?
சோத்தண்டா.
என்ன சோறு?
குத்தரிசிச் சோறு.
எந்தக் குத்து?
இந்தக் குத்து!
என்று சொல்லி உந்தத் தொணதொணப்புக்காரனை குத்துவார்.
இது இன்னும் வேறு சில மாதிரியும் சொல்லப்படும்.
Kommentarer
Legg inn en kommentar