சம்போ! சங்கரா! சிவா!
(மூலம்: பார்சுவபதே சம்போ!)
(ஆக்கம்: திரு. நரசிம்ம மூர்த்தி)
(ஆங்கிலத்தில்: திரு. பக்வத் ஷா)
(தமிழ்த் தழுவல்: ந.குணபாலன்)
(ஆக்கம்: திரு. நரசிம்ம மூர்த்தி)
(ஆங்கிலத்தில்: திரு. பக்வத் ஷா)
(தமிழ்த் தழுவல்: ந.குணபாலன்)
சிந்தும் ஒளி சீர் மாணிக்கம், அரதனம் சேர்
சொந்தமுடை அரியணையில் சொலிப்பவனே! - சோதீ!
மந்தாகினி மகிழ்ந்து பாய மஞ்சனம் ஆடுபவனே!- மாதீ!
பந்தமுடன் பணிகளும், பட்டாடையும் அணிந்தவனே! - பதீ!
கந்தமிகு சந்தனமும், கத்தூரியும் பூசியவனே! - கதீ!
வந்தனமுடன் வனைந்த வாச மலர்மாலையும், வில்வமும்,
நந்தா நெய்த்தீவமும், நறுமணத் தூவமும்,
எந்நாளும் நேர்த்தி, என ஏற்பவனே! - எந்தீ!
அந்திவண்ணா! அண்டம், அகண்டமெலாம் ஆக்குவாய்!- ஆதீ!
எந்தோவுனைச் சிறியேனென் சிறுமதியில் சிறை வைப்பேன்? - செந்தீ!
சிவா! சம்போ! சங்கரா! சிவா!
மூவுலகும் அருள்மழை மேவும் நன்முகிலே!
சிவனே! ஆனந்தத் தாண்டவா!
பவவினைப் பயம் கடிந்தெனைக் கா! பா நீ!
பொடியாக்கும் நின் மூவிழிப் பார்வை!
தொடியாகும் தொன்மைப் பூதமைந்தும்,
துடிக்கும் உயிர்யாவும், தூயோரும் துதிப்ப
நடிக்கும் நந்தியூர் நாயகனே! ஈசனே!
இலங்கு இராவணர் இரக்க அருள் ஈந்தவா!
மலங்கு மாரவேள்தனை விழியழலில் மாய்த்தவா!
காலத்துக்கும் கங்கு கரைகாணா
ஞாலப் பெருவெளிக்கும் காரணா! காய்த்தவா!
பாலனைக் காக்கப் பரிந்து வந்து
காலனைக் காலால் எறிந்தவா! எய்த்தவா!
அந்தமிலாதவா! ஆனந்தக்கூத்தா!
செந்நாவுடை ஊழித்தீ சேர்ந்து
சந்தமுடன் சதிராடும் சங்கரா!
பந்தமுடை உமாபதீ! பசுபதீ!
இந்துதவழ் சடையானே! அரனே!
மந்தணா! மகாதேவா!சம்போ!
சிவா! சம்போ! சங்கரா! சிவா!
மூவுலகும் அருள்மழை மேவும் நன்முகிலே!
சிவனே! ஆனந்தத்தாண்டவா!
பவவினை கடிந்தெனைக் கா! பா நீ!
சொற்பொருள் விளக்கம்:
அரதனம்-இரத்தினம் சோதீ - சோதியே மந்தாகினி- கங்கை மாதீ - பெருநெருப்பே பதீ - தலைவனே
கதீ - என் கதி நீயே எந்தீ - எனக்குரிய தீயே ஆதீ - ஆதியானவனே செந்தீ - செந்நெருப்பே கா- காப்பாய்,
பா- காப்பு தொடி - வளையல் மலங்குதல் - மனங்கலங்குதல் மாய்த்தவா - அழித்தவனே
காய்த்தவா - படைத்தவனே எய்த்தவா -மெய்வருத்தியவனே இந்து - சந்திரன்
மந்தணா - மறைபொருளே,இரகசியமானவனே
Kommentarer
Legg inn en kommentar