மாதொருபாகன்

(ஆதிசங்கரரின் அர்த்தநாரீசுவர தோத்திரத்தின் தழுவல்)
பொன்னார் நாகப் போதனைய மேனியளே!
செந்நாக் கற்பூரச் சுடரதன் செம்மேலோனே!கலை யலங்காரச் சுரிகுழலீ!
கலை புரிசடை முடிந்தோனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 1
குங்குமப்பூ கத்தூரி கூட்டிக் கோலஞ்செய் மேனியளே!
வெந்தவர் சாம்பல் வேண்டிச் சதிரம் பூசிய மேலோனே!
அன்புக் கதிர் வீசும் அழகே காமாட்சி!
வன்புடன் காமனை எரிசெய்த காமேசுவரா!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 2
சிணுங்கும் கிங்கிணி சீராடும் பாதத்தவளே!
பணிந்தாடும் நாகராசன் பயிலும் கழலானே!
பொற் கங்கணம் பொலியும் கையளே!
சுற்றும் பாம்பை சூடிய கரத்தோனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 3
நீர்வளர் நீலோற்பலம் அனைய நீண்ட கண்ணீ!
விரிதாமரை மலராக விளங்கும் கண்ணா!
இரட்டைத் தானத்துக் கண்ணீ!
ஒற்றைத் தானத்துக் கண்ணா!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 4
நறவுடை வன்னமிகு மலர்மாலை நயந்தவளே!
இறந்தவர் ஓட்டுமாலை இணக்கி இசைத்தவனே!
பட்டாடை இடைமீது படினமுடன் தொடுத்தவளே!
பத்துத் திக்காடை பாங்குடனே உடுத்தவனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 5
கார்முகில் திரள் போலும் கருங் கூந்தலாளே!
நெருப்பின் நாக்கனைய செம்பட்டைச் சடையானே!
நதி சிந்தி நடமாடும் வரையாளும் நாயகியே!
பதி கொண்டு அண்டமெலாம் பாலிக்கும் நாயகனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 6
திருநடனங் காட்டி தாவரசங்கமம் தீட்டிடுந் தேவி!
அருந்தாண்டவம் ஆடி அகிலங்கள் அழித்திடுந் தேவா!
அண்டசராசரங்களைத் தந்தாய்! எந்தாய் நீ!
அண்டசராசரங்களின் தந்தாய்! எந்தை நீ!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 7
நெளியரவம் இழையாக நேமித்த நிமலா!
சிவனவன் நெஞ்சம் சிறைசெய் காதலியே!
சிவை தன் சிந்தைகவர் காதலனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்! 8
காணிக்கையாம் கமலங் களிகூர் பாதக் கமலத்தவளே!
பணியாக பாம்பினைச் சூடிய பாதக் கழலோனே!
சந்திரவொளிச் சுடர் வீசும் அழகே!
இந்தின் இளம்பிறை ஒளிகால தலை சூடிய அழகா!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்!
எழும் அண்டத்து ஆதி, நடு, அந்தம் எல்லாமும் ஆனவளே!
எழுவான், படுவான் எத்திக்கும் ஏறெடுத்து அருள்பவனே!
எல்லாமும் தன்பதம் நாடிட அணைப்பவளே!
எல்லாமும் தத்தம் முடிவை நாடிட அடுப்பவனே!
சிவையே நினைச் சேவிக்கின்றேன்!
சிவனே நினைச் சேவிக்கின்றேன்!
Kommentarer
Legg inn en kommentar