1, 1. மேப்பிள்பிட்டி ஏமில்! - ஒரு அறிமுகம்

                              மேப்பிள்பிட்டி ஏமில்!- ஒரு அறிமுகம் 
                                          
                                         
                                                மூலக்கதை :"Emil i Lönneberga"
                                                எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                             ASTRID LINDGREN, SWEEDEN )
                                                                    (14/11-1907 --- 22/01-2002)
                                                         ஓவியம்: பியோர்ன் பெர்க், சுவீடன் 
                                                                   (Björn Berg , SWEEDEN 
                                                     (17/09-1923 ---- 14/07-2008)
                                                                           தமிழாக்கம்: ந.குணபாலன் 


மேப்பிள்பிட்டி என்கின்ற இடத்தில் ஏமில் என்கின்ற பொடியன் ஒருத்தன் இருந்தான். சரியான துடினம். சரியான பிடிவாதம். அவன் உங்களைப் போன்ற ஒரு சாதுவான பிள்ளை இல்லை. பார்த்தால் அவன் வாயைத் திறந்து குரைய வைக்கும் முன்னம், இந்தப் பொடியனோ? குழப்படிகாரனோ? என்று கேட்பீர்கள். அப்பிள் பழம் போன்ற உருண்டை முகம்; நீலநிற வட்டக் கண்கள்; வெளிர் மஞ்சள் நிற தலைமயிர். ஒட்டு மொத்தமாக அவனது உருவம் ஒரு அமைதியான தோற்றம் காட்டும். முதல் தரமாக அவனைப் பார்ப்பவர்களுக்கு ஒரு தேவனைப் போல தெரிவான். ஆனால் வெளித்தோற்றத்தை வைத்து ஆளை மட்டுக்கட்டி விடாதீர்கள். அஞ்சே அஞ்சு வயசு மட்டும், ஆனால் ஒரு அளவான நாம்பன் மாட்டுக் கன்றினுடைய பலம் அவனுக்கு!

ஏமில்; பூனைக்கலட்டி வளவு, மேப்பிள்பிட்டி, சின்னான்காமம் என்ற முகவரியில் வசித்து வந்தான். சின்னான்காமத்துப் பேச்சுவழக்கில் தான் கதைப்பான். அதற்கு அவன் ஒன்றும் செய்யேலாது. சின்னான்காமத்துச் சனங்கள் எல்லாருமே சின்னான்காமத்துப் பேச்சுவழக்கிலேயே கதைப்பார்கள். மற்ற மாவட்டத்து மக்கள் எல்லோருமே தொப்பி என்று சொல்வதை, ஏமில் மற்றைய சின்னான்காமத்துக்காரர் மாதிரியே தொப்பாக்கி என்று சொல்லுவான். அந்த அவனுடைய தொப்பாக்கி, ஒரு தாழ்வாரத் தொப்பி(caps). தாழ்வாரம் கறுப்பு நிறம், மிச்சம் முழுக்கக் கருநீல நிறமான தொப்பி. பெரிதாக அதை ஒரு வடிவான தொப்பி என்று சொல்லேலாது. அந்தத் தொப்பியை ஏமிலுக்கு அப்பா அந்தோன் ஒருதரம் பட்டணம் போய் வந்த போது வாங்கி வந்தார். ஏமிலுக்கு அந்தத் தொப்பியில் நல்ல பிடிப்பு. எட! இராத்திரி படுக்கைக்குப் போகின்ற நேரத்திலும் அவனுக்கு அவனுடைய தொப்பாக்கி வேண்டும். ஏமிலுக்கு அம்மா அல்மா தொப்பியுடன் ஏமில் படுப்பது பிடிக்காமல் ஒருநாள் அதை எடுத்து உள்வாசலில் மேலங்கிகள் வைக்கும் தட்டிலே வைக்கப் போனா. அப்போது அந்த இராத்திரி நேரத்தில் முழு மேப்பிள்பிட்டியுமே எடுப்படத் தக்கதாக ஏமில்,
" என்னுடைய தொப்பாக்கி எனக்கு வேண்டும்" என்று ஒரு காட்டுக் கத்தல் போட்டான்.


மூன்று கிழமையாக நல்ல நித்திரையில் கூட அவன் தன் தொப்பியை வழுகி விழ விடவில்லை. கொஞ்சம் சரவலான காரியம் தான். ஆனாலும் அவனது பிடிவாதம் அப்படி. எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் ஏமில் தான் நினைத்ததை சாதித்தது. அதையிட்டு அவனுக்கு நல்ல மனநிறைவு. அம்மா நினைத்தபடி நடக்காமல் ஏமில் தான் விரும்பின படியே சாதித்தான். இப்படித்தான் ஒரு தரம் நத்தார் நேரம், மரக்கறி உணவு உடல் நலத்துக்கு உகந்தது என்ற போதும், மசித்த பச்சைக் கடலையைத் தின்ன மாட்டேன் என்று நாண்டு கொண்டு நின்றான்.
"அப்படியானால் இனி எந்தக் காலத்திலும் மரக்கறி சாப்பிட மாட்டாயோ?" என்று ஏமிலுக்கு அம்மா அல்மா கேட்டா.
"ஏன்? நான் சாப்பிடுவேன் தானே!" என்றான் ஏமில்.
"ஒழுங்கான மரக்கறி என்றால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்." மெள்ள ஆள்காட்டாமல் எழுந்து போய்  நத்தார் மரத்துக்கு அருகில் போய்க் குந்தி இருந்தான். நத்தார் மரமாக ஒரு தேவதாரு மரம் அலங்காரமாக கூடத்தில் நின்றது. அதன் ஊசியிலைகளை ஏமில் நன்னிப் பார்த்தான். அது வாயிலே குத்தினது. அத்துடன் சுவையாகவும் இல்லை. அவனுக்கு அது பிடிக்கவில்லை.

இப்பிடி ஒரு பிடிவாதக் குணம் ஏமிலுக்கு. சகல காரியங்களும் தான் தான் தீர்மானிக்க வேண்டும். அம்மா, அப்பா, பூனைக்கலட்டி வளவு என்ற அளவில் மட்டும் இல்லை, மேப்பிள்பிட்டி ஊர் முழுதுமே அவன் தீர்மானப்படி நடக்க வேண்டும் என்பது அவனது நினைப்பு. பெற்ற தாய்தகப்பன் அவனுடைய நினைப்புக்கு ஒருதரம் இல்லாவிட்டாலும் இன்னொருதரம் ஓம்படக்கூடும். ஆனால் மற்ற மேப்பிள்பிட்டிச் சனத்துக்கு என்ன தலையெழுத்தே, அவன் போடுகின்ற தாளத்துக்குக் கூத்தாட?

"பாவம் உந்த பூனைக்கலட்டி வளவுச் சனம்! ஒரு வம்புதும்புக்கும் போகாத அந்த சாதுவான சனத்துக்கு என்று பார்த்து இப்படி ஒரு அடங்காத பிள்ளை ஒன்று வந்து பிறந்திருக்கு! உந்தப் பெடி ஒருக்காலும் உருப்படாது கண்டீரோ!" என்று ஏமிலைப் பற்றி புறணி சொன்னார்கள். சொன்னது மட்டுமில்லை நம்பவும் செய்தார்கள். ஆனால் பிற்காலத்தில் ஏமில் எப்படியெல்லாம் உருப்பட்டு வருவான் என்று அறியக் கூடிய தன்மை, அவர்களுக்கு அந்த நேரத்தில் இருந்திருக்குமானால் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏமில் வளர்ந்து பெரிய ஆள் ஆகி கிராமசபைத் தலைவராக எல்லாம் வருவான் என்று அந்த நேரத்தில் ஆர்தான் கனவு கண்டது?


ஆனால் நாங்கள் இப்போது ஏமிலின் சிறுவயதுப் பராயத்து நடப்புகள் என்ற மட்டில் நிற்போம். அந்த நாட்களில் பூனைக்கலட்டி வளவு என்ற கமத்திலே, மேப்பிள்பிட்டி என்ற கோயில்பற்றிலே, சின்னான்காமம் என்ற மாவட்டத்திலே ; அப்பா அந்தோன் சிவேன்சொன், அம்மா அல்மா சிவேன்சொன், தங்கச்சி ஈடா ஆகியோருடன் ஏமில் வசித்து வந்தான். பூனைக்கலட்டி வளவிலே வசித்த இன்னும் இருவரைப் பற்றியும் சொல்லவேண்டும். ஒருவர் கமத்துப் பணியாள் அல்பிறெட், மற்றவர் வேலைக்காரப்பெண் லீனா. ஏமில் சின்னப் பொடியனாக இருந்த அந்த நாளைகளிலே இப்படியாக கமத்துப் பணியாளரும், வேலைக்காரப் பெண்களும் மேப்பிள்பிட்டி முழுவதில் மட்டுமில்லை, நாடு முழுக்க இருந்தார்கள்; எல்லாக் கமங்களிலும் பணி புரிந்தார்கள். கமத்துப் பணியாளர் குதிரைகளை, நாம்பன் மாடுகளைப் பராமரிப்பது, கமத்துவேலைகள் செய்வது, வைக்கோலைப் பாதுகாப்பாக கிட்டங்கியில் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்தார்கள். வேலைக்காரப் பெண்களோ என்றால் பால் கறந்தார்கள், உடுப்புக்களை தோய்த்தார்கள், சமையல் செய்தார்கள், சின்னக் குழந்தைகளை ஓராட்டினார்கள், அவர்கள் அழுகின்ற நேரங்களில் ஓடிப் போய் இடுக்கினார்கள்.

அந்தப் பூனைக்கலட்டி கமத்துவளவிலே ஆரார் வசித்தது என்று ஒருக்கால் இப்போது பார்ப்போம். அப்பா அந்தோன், அம்மா அல்மா, குட்டிபிள்ளை ஈடா, அல்பிறெட், லீனா, குதிரை இரண்டு, நாம்பன் மாடு இரண்டு, பசுமாடு எட்டு, பன்றி மூன்று, கம்பளியாடுகளில் மறி பத்து, கிடாய் இரண்டு, சாவல் ஒன்றுக்குப் பேட்டுக்கோழி ஒரு பதினைஞ்சு, ஒருநாய், ஒரு பூனை அத்தோடு உவன் உந்த ஏமில்.



பூனைக்கலட்டி ஒரு வடிவான சின்னக்கமத்துடன் சேர்ந்த வீடு வளவு. ஒரு ஏற்றமான பிட்டியில் அப்பிள் மரங்கள் ஒரு பக்கமும் செர்ரி மரங்கள் மறுபக்கமும் நிற்க நடுவிலே அரத்தச் சிவப்புச் சாயம் பூசின வீடு இருந்தது. அத்துடன் குதிரைமால், கால்நடைக் கொட்டாரம், களஞ்சியம், ஆயுதசாலை, பணியாளர் குடிமனை, தச்சுப்பட்டறை என்று பெரிதும் சிறிதுமாக சில கட்டடங்கள் இருந்தன. சுற்றவர வயல் காணி, தோட்டக்கை, புல்லுத்தறை, பின்பக்கமாக ஒரு குளம், பெரிய காடு என்று இருந்தது. ஏமில் என்ற ஒருத்தன் மட்டும் இல்லை என்று கண்டால் அந்தப் பூனைக்கலட்டி வளவில் ஒரு சத்தஞ்சிலார் இல்லாமல் அமைதியாக இருந்திருக்கும்.

" உவன் ஏமில் பொடியன் ஒரே புரளி. சரியான கூத்துக்காரன்" என்பாள் லீனா.
" சும்மா இருந்தாலும் அவன் உள்ள இடத்தில் கூத்தும் குழப்பமும் தான். இப்படி ஒரு பிள்ளையை நான் வேறெங்குமே கண்டதில்லை."
ஏமிலுக்கு அம்மா ஒருநாளும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டா.
"எந்த ஒரு குழப்பமும் ஏமிலுக்கு இல்லை. இன்றைக்கு அவன் மெதுவாக ஈடாவைக் நுள்ளி விட்டவன், கோப்பிக்கு என்று வைத்த பாலைக் கைதவறித் தட்டி விட்டவன், அம்மளவுந்தான். ...........ஓ கோழிக்கூட்டைச் சுற்றிப் பூனையைக் கலைத்துக் கொண்டு ஓடினவன், அது மெய்தான்! ஆனால் என்றாலும் இன்றைக்கு அவன் சாது போல நல்ல பொடியனாக இருக்கிறான்."

ஏமில் ஒன்றும் மற்றவர்களை அடித்து ஆய்க்கினை செய்யும் ஒரு பொடியன் இல்லை. அப்படி நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடாது. அவனுக்கு ஈடாவில் நல்ல வாரப்பாடு, பூனையில் நல்ல விருப்பம். ஈடாவைக் கொஞ்சமாகக் நுள்ள வேண்டி வந்தது. இல்லை என்றால் அவள் கையில் வைத்திருந்த பாணி பூசின பாண்சீவலைத் தந்திருக்க மாட்டாள். பூனையைக் கலைத்தது எல்லாம் ஒரு விளையாட்டுத் தோழமையில் தான். சும்மா பூனையைப் போல கதியாக தன்னாலும் ஓட ஏலுமோ என்று சோதித்துப் பார்க்கத் தான். பாவம் அது அந்தப் பூனைக்குத் தான் விளங்காமல் போய்விட்டது.

அன்றைக்கு மார்ச்சு மாசம் ஏழாந்திகதியில் ஏமில் சாது போல நல்ல பொடியனாக இருந்த அன்றைய நாளிலே செய்ததெல்லாம் ஈடாவைக் கொஞ்சம் நுள்ளினதும், கோப்பிக்கு வைத்த பாலைக் கைதவறித் தட்டிவிட்டதும்,  பூனையைக் கலைவு காட்டினதும் மட்டுந்தான். ஏமிலின் வாழ்க்கையில் வேறு சிலபல நாட்களில் நடந்த  சிலபல நடப்புக்களைப் பற்றி  இப்போது சொல்கின்றேன் கேளுங்கள். லீனா சொன்ன கணக்கிலே, ஏமில் தன்பாட்டில் சும்மா இருந்தாலும் அவன் உள்ள இடத்தில் கூத்தும் குழப்பமும் தான்.

                                                  (தொடரும்)

சொல்விளக்கம்:
துடினம் - துடியாட்டம்
சாது - அமைதி
குரையை வத்தல் - கத்துதல்
மட்டுக்கட்டுதல் - அடையாளம் காணுதல்
நாம்பன் மாடு - காளை மாடு
எடுபடத் தக்கதாக - கேட்கத் தக்கதாக
சரவல் - சிரமம்
நாண்டு கொண்டு - பிடிவாதமாக
ஆள்காட்டாமல் - ஆரும் அறியாமல்
நன்னுதல் - விருப்பமில்லாமல் கொஞ்சமாக தின்னுதல்
ஓம்படுதல் - ஓம் எனச் சம்மதித்தல்
பெடி , பொடியன் - சிறுவன்
புறணி - குறை
கிட்டங்கி - களஞ்சியம்
உடுப்பு தோய்த்தல் - சலவை செய்தல்
ஓராட்டுதல் - தாலாட்டுதல்
இடுக்குதல் - கவ்வுதல், தூக்குதல்
கோயில் பற்று - parish
கிடாய் - கடா, ஆணாடு
மறியாடு - பெண்ணாடு
சாவல் - சேவல்
குதிரைமால் - குதிரை இலாயம்
கால்நடைக் கொட்டாரம் - கால்நடைகளை அடைக்கும் பெரிய கொட்டில் வீடு
தோட்டக்கை - தோட்டக்காணி
புல்லுத்தறை - புற்றரை


சிறுகுறிப்பு:
கோடைகாலத்தில் புல்லு வளர்த்து அறுத்து வேலி போலத் தொங்கவைத்துக் காற்றில் காயவைத்து வடந்தைக் காலத்துக்கு ஆடு, மாடு, குதிரைக்குத் தீனாக சேர்த்து வைப்பார்கள்.


                                                                     

                                                                           



சத்தஞ்சிலார்= சத்தம்+ சிலார் = ஒலி + குழப்பம்
சத்தஞ்சிலார் இல்லாமல் - குழப்பமான சத்தமில்லாமல்
புரளி, குழப்படி - குறும்பு
ஆக்கினை - துன்பம்
கதியாக - வேகமாக
கணக்கிலே - மாதிரியாக











Kommentarer