சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு


                                         சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு



ஐரோப்பியக் குயில் (Cuculus canorus)
                                      
                                                                             இளவேனிற்காலம் தொடங்கி விட்டது. 
குயில்களின் கூவலை  அடிக்கடி கேட்கலாம். சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது குயிலுடன் ஏட்டிக்குப் போட்டியாகக்கூவியிருக்கிறோம். 
மெதுவே  தொடங்கும் கூவல் ஒலியின் கதி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி 
உச்சத்துக்கு அவசர அவசரமாகச் சென்று சட்டென்று நிற்கும். ஒரு சுகமான புளகமான(புளுகமான) சிறுவயசின் அனுபவம்தான் இல்லையே? இன்றும் தாயக மண்ணில் சின்னப் பிள்ளைகள் குயிலுக்கு எதிரொலி கொடுப்பார்கள்  என்று நினைக்கிறேன்.
                                                                             
                                                                         "சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா சும்மா கூவுது" என்றொரு பாடலைக் கேட்டிருக்கிறோம். ஆனால் குயிற்குஞ்சு
களிப்புடன் கூவுமோ? ஐமிச்சம்தான்.காக்கையின் கூட்டில் காக்கைக்குஞ்சுகளுடன் 
குஞ்சாகப் பிறந்து வளரும் குயிற்குஞ்சு "கீச்சுக் கீச்சு" என்ற குரல் மாறித் தன் சொந்தக்  குரலைக் காட்டும் போது கொடியதொரு தலை 
எழுத்தைச் சந்திக்கும் ஒரு கொடுவினை.    தன் சொந்த விருப்புக்கு மாறாய் ஏமாந்து பிறத்தியார் பிள்ளையை வளர்த்த சங்கதியை உணர்ந்ததும்; தாய்க்காகம் குயிற்குஞ்சைக் குட்டிக் கலைக்கும். சரிவரப் பறக்கவும் தெரியாமல், அரத்தம் வழிய பயத்துடன் தவிக்கும் குயிற்குஞ்சுகளை நாம் பார்த்திருக்கிறோம்; பார்க்கிறோம். இது எங்கள் பக்கத்துக் குயில் தப்பிப் பிழைக்கும் கதை. காக்கைக் கூட்டைத் தவிர வேறு பறவைகளின் கூட்டிலே குயில் போய் முட்டை இட்டது பற்றி நாம் முன்பு அறிந்ததில்லை.

                                                                                 ஆனால் இளவேனிற்காலத்தில் ஐரோப்பாவிற்கு வட ஆபிரிக்காவிலிருந்தும், மேற்காசியாவிலிருந்தும் புலம்பெயர்ந்து வரும் குயில்கள், அதுவும் பெண்குயில்கள் சரியான சுத்து மாத்துக்காரிகள் தான். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். " ஐயோ பாவம்" என்று உங்களையும் அறியாமல் சொல்லி இருப்பீர்கள். அதுவும் அந்த ஏமாந்த தாய்க் குருவியைப் பார்த்து. செவிலித்தாயை,அது அமைத்த கூட்டை   விடப் பெரிதாக வளர்ந்துவிட்ட  குயிற்குஞ்சைப் பாருங்கள்.

                                                                  
                                                               


 புல்லுப் பாடகர் (Rørsanger/Eurasian Reed Warbler)  என்ற இந்தக்குருவியின் கூட்டிலே ஒரு தந்திரக்காரக்குயில்,கூட்டின் சொந்தக்காரியான  குருவியின் முட்டைகளில்  ஒன்றைக் கொத்தி எறிந்து விட்டுத் தன் முட்டையை இட்டுவிட்டுப் போய் விட்டது.  குயிலின் முட்டையும்; குருவியின் முட்டை அளவிலே அந்தநிறத்தை அண்டி   இருக்கும்.  
                                                              


ஒரு பெண்குயில் 10 -20  முட்டைகளை ஒருதரத்துக்கு இட்டு வைக்கும். அப்படியானால் 20  குருவிகள் ஒரு  பருவகாலத்தில் ஏமாற்றப் பட்டு குயில் குஞ்சுகளை வளர்க்கும் செவிலித்
தாயராகும். எப்போதும் குயிற்குஞ்சுதான் முதலில் பொரிக்கும்.  தன்னுடன் பிறந்த தப்பிப் பிழைக்கும் உணர்வு உந்தித் தள்ள மற்றைய முட்டைகளை அதாவது செவிலித்தாயின் முட்டைகளை மெல்ல மெல்லக் கூட்டை விட்டுக் கீழே தள்ளும். தான்  மட்டும் தனிப்பிள்ளையாக வளரும்.

                                                              


குயில் குஞ்சு பொரிக்க எடுக்கும் காலம் 12 நாள். கூட்டை விட்டு 19  நாளில் வெளியேறும். ஆயினும்  தொடர்ந்தும் ஒன்று, இரண்டு கிழமை  வரை வளர்ப்புப் பெற்றோரின் உதவியில்  
தங்கியிருக்கும்.                                                        

                                                   


    
                                         

                                         
வேறும் சில இனப் பறவைகளும் இப்படிக் குயிலின் தந்திரத்தால் ஏமாந்து குயிற்குஞ்சை வளர்க்கும்.


Bramling(Fringilla Montifringilla)
                                                


Brambling  இன்  முட்டைகளுடன் கொஞ்சம் பெரியதாக இருப்பது குயில் முட்டை  
ஒவ்வொரு பெண்குயிலும் ஒரு குறித்த இனத்துப்  பறவையைத்தான் குறி வைத்து  தன்  முட்டையை உருவமைக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும்.   பெண் குயிலின் ஈன்களும்(genes), நிறமூர்த்தங்களுமே(chromosomes) முட்டையின் அளவு, வண்ணம்  என்பவைகளை தீர்மானிக்கும்.

இங்கே நோர்வேயிலே; குயிலின் கூவல் இளவேனிற் காலத்திலே  கேட்டதன் பின்னே தான் கொஞ்சம்  பழைய சனங்கள்   , சின்னப் பிள்ளைகளை வடந்தை(winter)ஆடைகளை தவிர்த்து மண்ணில் இருந்து விளையாட விடுவார்கள். சலக்கடுப்பு நோய்   பிள்ளைகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே இப்படி ஒரு நடைமுறை இருக்கிறது. குயிலை இங்கே கண்ணால் பார்ப்பது கயிட்டம். குயில் கூவும்போது அது இருக்கும் மரத்தின் கீழே போய் நின்று விரும்பும் மூன்று ஆசைகளை நினைத்தால் அவை நிறைவேறும் என்று ஒரு மூடநம்பிக்கை வாசகமும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அப்படி ஆரும் செய்து பார்த்தார்களோ நானறியேன்.

Kommentarer