
கொண்டல்மரமே!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே?
நாங்கள் கும்பிட்டுக்
கொண்டாடுந் தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ ! நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !
உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும்,
குடியழிஞ்ச நாடுமாச்சே!
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;
ஓடிப்போன இடம் ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !
ஆரார் எங்கினை இருக்கினம்?
ஆரார் போய்ச் சேர்ந்திட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும் ஆளில்லாமல்
போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் இன்னும்
அவையளை ஆய்க்கினைப் படுத்துதோ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? பழைய
நடப்பெல்லாம் மறந்து நடக்கினமோ?
மறக்க ஏலாமல் மறுகிச் சாகினமோ?
இல்லை போற வழிவழிய
கடலுக்கும், கண்டம் தாண்டி
பனி மலையுக்கும்,
பனி மழையுக்கும்
பசளையாய் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பார்த்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்.
இம்மளவு அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கொரு
எட்டு எட்டி வந்து கர்ப்பூரக்
கட்டி வைச்சு மனசாறிக்
கும்பிட ஏலாமல் கிடக்கே எண்டு
நாங்கள் தான் ஏங்கி நிண்டம் .
கோயில் மணி உடைஞ்சு போச்சே,
தேரும், சூரனும் நொருங்கிப் போச்சே எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான் .
கிட்டக் கிழலைக்கும்
அண்டாமல் அடுக்காமல் எங்களை
எட்ட வைச்சாய்! உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!
செய்வினை வைச்சது ஆரெண்டு
சாமியாடுற கோயிலுக்கு
சாத்திரம் கேட்டுப் போனால்
சாமி வந்து உருவாடி
"எல்லாமே என்ரை குஞ்சு தான்"
எண்டு கூத்தாடும்!
அப்பிடித்தான் ஆச்சி நீயும்
கோழியும் எங்கடை
புழுங்கலும் எங்கடை
எண்டு இருக்கிறியே ?
அழுந்தி வதைபட ஆய்க்கினை
செய்தது எல்லாமே உன்ரை
சதியோ? எங்கடை விதியோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கிய
சங்கையீனமும், வருத்தமும்,வேதினையும்;
கொஞ்ச நஞ்சமே? கொண்டல்மரத்தாச்சி.
ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
அந்தரிச்சு ஆய்க்கினைப் பட்ட வேளையிலை கூட
ஆருமே ஆச்சி உன்னை கூப்பிடேல்லையே?
கறுமியம் கனத்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போக கைவிட்டிட்டியோ?
தாயே நீதான் எண்டு ஆதரிச்சமே?!
குட்டை பிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப்பாடு பட
நமக்கு விதிச்சு வைச்சாய்!,
நரகம் விரிச்சு வைச்சாய்!
ஆரின்ரை கண் பட்டுது?
ஆர் வைச்ச வினையிது?மனம்
பரிதவிக்க , சதிரம் பதைபதைக்க,
உறவையும், உறுப்பையும், உடமையையும்
பறி குடுத்த நேரத்திலை;
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வம் எல்லாம்
சோதினை தான் செய்ததெல்லே ?
சீரழிய வைச்சதெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம் மனங்
கல்லாகி இருந்ததெல்லே?
கண்டியே நமக்கு வந்த வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயும்?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
ஒண்டு மட்டும் உன்னட்டை பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்!
மண்ணாங்கட்டி போனாலென்ன?"
எண்டு கிடப்பமே ? ஏலாது! எங்களுக்காய்
மாண்டு போனவை போக
மசான வெளி தாண்டி தப்பி
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும் இளஞ்சந்ததியும்
வேண்டி உன் வாசல் வந்து
கொண்டாடும் காலம்
ஒண்டு வரும். ஏழு கடலும்
தாண்டி இருக்கிற எங்கடை சனம்
எல்லாம் வரும். எதிர்காலம்
நல்லாய் வரும்.
கொண்டல் மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழ்க!
கொண்டல் மரத்திலை
குடி கொண்டவளே!
என்னதான் எங்களை நீ மறந்தாலும்;
என்னதான் நாங்கள் உன்னை
ஏலாக்கொடுமையில் ஒருநேரம்
எண்டைக்கும் எங்கடை மனத்திலை
கொண்ட கோலம் மாறாமல்
குடி வந்தவளே!
கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி
நீயும் வாழி!
பாலு
Kommentarer
Legg inn en kommentar